”ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிய சிலிண்டர் விலை”; அதிர்ச்சியில் பொது மக்கள்

வீட்டுச் சமையலுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில்  எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை அரசு பிறப்பித்து நடைமுறைப்படுத்தியது. எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.  

இதனால், அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மிக மோசமான அளவில் உயர்ந்துள்ளது. அந்த வகையில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாகிஸ்தான், சமையல் எரிவாயு தேவையில் 70 முதல் 75 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், உலகின் பல முக்கிய நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. அந்த நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் மிக முக்கிய நாடாக உள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தற்போது நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடும் தலைதூக்கியுள்ளது. இதன் விளைவாக, ஒரு கிலோ சமையல் எரிவாயு ரூ.750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் நீட்சியாக, ஒரு எரிவாயு சிலிண்டர் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்திற்கு அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.3,500 ரூபாயாக இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. இந்த விலைவாசி ஏற்றம் சாதாரண மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.