ரூ.100 கோடி கோவில் நிலம் போலி ஆவணம் தயாரித்து விற்பனை; காரைக்குடியில் பொதுமக்கள் ஆவேசம்

காரைக்குடி: காரைக்குடி நகரின் மையப்பகுதியில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்த ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அதிகாரிகள் துணையுடன் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் குறிச்சிபுறவு பகுதியில் இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இது, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றாகும். பரம்பரை அறங்காவலர்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமாக காரைக்குடி நகரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலம், பல்வேறு பகுதிகளில் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர், தேவஸ்தான அனுமதி பெற்றும் மற்றும் இடவரி செலுத்தியும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இரண்டரை ஏக்கர் நிலம் அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்களை கொண்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி. இந்த நிலத்துக்கு காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுததலுக்கு தயாராக உள்ள நிலையில் கிராம மக்கள் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

குறிப்பிட்ட அந்த இடத்தை ஜேசிபி உதவியுடன் வாங்கியவர்கள் சுத்தம் செய்தபோது தான் இடம் விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது. இரு தரப்பையும் அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா பேச்சு நடத்தினார். கோவில் இடம் என புகார் வந்துள்ளதால் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்து இடத்தை சுத்தம் செய்யுமாறு நிலம் வாங்கியவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து நிலம் வாங்கியவர்களும், ஊர் மக்களும் மாறி மாறி போலீஸ் ஸ்டேஷனில் வாக்குவாதம் செய்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இதே இடத்தை பத்திர பதிவு செய்து நான்கு பேர் பட்டா பெற்றனர். அதை கோவில் நிலம் ஆக்கிரமிப்பு என்று கண்டறிந்து பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link