சென்னை: ‘மெத் ஆம்பெட்டமைன்’ போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் தவெக மாஜி நிர்வாகியின் கூட்டாளி ராஜ்குமார் தலைமறைவாகி உள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழப்பிடாகை அருகே, சிந்தாமணி என்ற கிராமத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் பதிப்புள்ள, மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த, த.வெ.க., நிர்வாகியும், வழக்கறிஞருமான பூபாலன், 42 மற்றும் இவரது கூட்டாளிகள், மணிகண்டன், 29, சதீஷ், 30, சுகன், 36 ஆகியோர், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பூபாலன், தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர்கள், சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. நாகப்பட்டினத்தில் இருந்து படகு வாயிலாக மெத் ஆம்பெட்டமைன் எடுத்துச் சென்று, நடுக்கடலில் இருந்து கப்பல் வாயிலாக, இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இவர்களின் கூட்டாளிகள், ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில், பூபாலன் உள்ளிட்ட கடத்தல் கும்பலுடன் சேர்ந்து, அவரது கூட்டாளி ராஜ்குமார் என்பவரும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. ‘பைனான்ஸ்’ தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில், இரண்டு தனியார் விடுதிகளையும் நடத்தி வருகிறார்.
மேலும், மெத் ஆம்பெட்டமைன் கடத்தலுக்கு, இவரது காரை பயன்படுத்தி வந்ததையும் டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, திருச்சியில், டி.ஆர்.ஐ., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, ராஜ்குமாருக்கு ஏற்கனவே ‘சம்மன்’ அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார்.
இதற்கிடையே, இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த, வேளாங்கண்ணி டி.எஸ்.பி.,யின் கார் ஓட்டுனரான போலீஸ்காரர் சிவக்குமார், பெண் போலீஸ் சங்கீதா ஆகியோர்,தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
