ரூ.100 கோடி மோசடி வழக்கில் மகேஷ் கைது ஏன்? காவல்துறை சொல்வது இதுதான்

திமுக மாஜி அமைச்சர் மகேஷ் கைது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷ் மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுல கிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (அக்.26) முன்னாள் அமைச்சர் மகேஷ் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட மகேஷ் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Source link