புதுடில்லி:நம் நாட்டின் கடல் வர்த்தகத்திற்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ‘பாரத கடல் காப்பீட்டு நிதியம்’ என்ற நிதி ஆதாரத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்ததாவது:
பாரத கடல் காப்பீட்டு நிதியம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மனதில் கொண்டு, இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் கப்பல் காப்பீட்டு செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதை சமாளிக்கவும், இந்திய வர்த்தகர்களுக்கு குறைந்த செலவில் காப்பீடு கிடைப்பதை உறுதி செய்யவும் 12,980 கோடி ரூபாய் அரசு உத்தரவாதத்துடன் இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டு நிதியம் வாயிலாக, இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் அல்லது நம் நாட்டுக்கு வந்து செல்லும் கப்பல்களுக்கு காப்பீடு வழங்கப்படும். இந்த காப்பீட்டு திட்டங்களை, நிதியத்தின் உறுப்பினர்களாக உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்.
இந்த திட்டத்தின் வாயிலாக, இந்திய கடல் போக்குவரத்து தேவைகள் மற்றும் சட்டங்களுக்கு ஏற்ப கடல் காப்பீட்டு சேவைகளை வடிவமைத்து வழங்க முடிகிறது. மேலும், கடல் காப்பீடு தொடர்பான நிபுணத்துவம், காப்பீடு நிர்வாகம் மற்றும் சட்ட நுணுக்கங்கள் உள் நாட்டிலேயே மேம்படுவதற்கு இத்திட்டம் வழி வகை செய்கிறது.
இந்த திட்டம் 10 ஆண்டுகள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அதை 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
