ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே, 2.79 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., கட்ட நோட்டீஸ் வந்ததால், கூலி தொழிலாளியான 65 வயது மூதாட்டி ருக்மணி அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, புதுார் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி ருக்மணி, 65. கூலி தொழிலாளி. இவர், 125 நாள் வேலை திட்டத்தில் செய்யும் பணிக்கு பணம் பெற, சந்தைக்கோடியூர் இந்தியன் வங்கி கிளையில் கணக்கு தொடங்கி உள்ளார்.
வங்கியில் பணம் எடுக்க சென்றபோது, வங்கி ஊழியர்கள், ‘உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என, கூறினர். மேலும், ஆம்பூரிலுள்ள பழங்குடியினர் உதவி ஆணையர் மூலமாக, மூதாட்டி ருக்மணிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘உங்களின் ஆர்.எம்., டிரேடர்ஸ் மூலம், 2.79 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்தாமல் உள்ளீர்கள். அதை உடனடியாக செலுத்த வேண்டும்’ என, இருந்தது.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி, தன் கூலி பணத்தை, வங்கியிலிருந்து எப்படி எடுப்பது என தெரியாமல், தவித்து வருகிறார்.
