தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில், திருச்சி மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.பாஸ்கரன், இயக்குநர் சரவணன் மற்றும் வழக்கறிஞர் தியாக. காமராஜ் ஆகியோர் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
“தஞ்சாவூர் வல்லம் நெ.1 சாலையில் அமைந்துள்ள எங்கள் தனியார் மருத்துவமனையில் பங்குதாரராக இருந்த ஜெயஸ்ரீ ராமசாமி, சில காரணங்களால் நிர்வாகத்திலிருந்து வெளியேறினார். இதற்காக அவருக்கு ரூ.19 கோடி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த ஆண்டு மருத்துவமனையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மருத்துவமனை பங்குதாரர்கள் மற்றும் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று கூறினர்.
ரூ.5 கோடி மிரட்டிப் பறிப்பு:
மருத்துவமனை விவகாரத்தில் தலையிட்ட மத்திய மண்டல காவல் துறை உயரதிகாரி ஒருவர், இந்தச் சிக்கலை முடிப்பதற்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் ரூ.5 கோடி தர வேண்டும் என மிரட்டியதாக மருத்துவமனை நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
பணம் தராவிட்டால் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றி தஞ்சாவூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறனிடம் ரொக்கம் மற்றும் காசோலையாக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படவில்லை.
தங்களைப்போல வேறு யாரும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் ஏமாறக் கூடாது என்பதற்காக, இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் எனத் தமிழக டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸார், காவல் ஆய்வாளர் சுகுமாறனைக் கைது செய்தனர்.
சி.பி.ஐ விசாரணை கோரிக்கை:
வழக்கில் மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரிக்குத் தொடர்பு இருப்பதால், உள்ளூர் காவல்துறையினரால் நேர்மையான விசாரணை நடைபெறாது எனக் கருதுவதாகவும், எனவே இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, காவல் ஆய்வாளர் சுகுமாறனின் கைது சட்டவிரோதமானது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,
ஒருவர் கைது செய்யப்படும்போது, அதற்கான உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். சுகுமாறன் கைது செய்யப்பட்டபோது அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சுகுமாறனின் கைது சட்டவிரோதமானது எனக் கூறி, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
