எழுதியவர்: ஹரிகிருஷ்ணன் ஷர்மா
பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் தற்சார்பு பருப்பு இயக்கத்தின் கீழ், ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் இதுவரை எந்தத் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கான இந்த இயக்கத்தின் முதல் ஆண்டு முடிந்துள்ள நிலையில், ஆராய்ச்சித் திட்டங்களுக்கான ஒப்புதல் நடைமுறைகளை விரைவுபடுத்துவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகுதியான திட்டங்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என்றும், நவம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்றும் அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி தொடர்பான வேளாண் ஆராய்ச்சிகளை மறுசீரமைப்பது குறித்து அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தாமதம் சுட்டிக்காட்டப்பட்டது. மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையில், புதுடெல்லியில் உள்ள சேவா தீர்த்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேளாண் துறைச் செயலாளர் அதிஷ் சந்திரா, சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் நரேந்திர பூஷண், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைச் செயலாளர் மாங்கி லால் ஜாட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
தேசிய பருப்பு இயக்கத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைச் செயலக அதிகாரிகள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. தேசிய பருப்பு இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடிக்கான ஒப்புதல் நடைமுறைகளை இந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு வேளாண் அமைச்சகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த வேளாண் அமைச்சகம், ஆராய்ச்சிக்கான முன்னுரிமைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தகுதியான அமைப்புகளிடமிருந்து திட்ட முன்மொழிவுகள் வரவேற்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இதுவரை மொத்தம் 419 திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டு, அவை முதற்கட்டத் தேர்வு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) நிறுவனங்களிடமிருந்து 125 முன்மொழிவுகளும், மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து 249 முன்மொழிவுகளும் பெறப்பட்டுள்ளன. பிற அரசு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 14 முன்மொழிவுகளும், தனியார் பல்கலைக்கழகங்களிடமிருந்து ஐந்து முன்மொழிவுகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னுரிமை ஆராய்ச்சித் தேவைகள் மற்றும் இயக்கத்தின் நோக்கங்களுடன் பொருந்துகிறதா என்பதன் அடிப்படையில், திட்ட முன்மொழிவுகளை ஆய்வுக் குழு பரிசீலித்து, அடுத்தகட்ட விளக்கக்காட்சிக்கான திட்டங்களைத் தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட திட்டங்களை ஆய்வாளர்கள், தேசிய அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் முன் சமர்ப்பித்து வருகின்றனர். கூடுதல் செயலாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள், இயக்க அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
திட்டங்களின் அறிவியல் தகுதி, அவற்றின் பொருத்தம், விவசாய நிலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், விவசாயிகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் பலன்கள், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளுடன் அவை ஒன்றுபடுகின்றனவா என்பன உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பீட்டின்போது ஆய்வு செய்யப்படுகின்றன. முந்தைய மூன்று கூட்டங்களிலேயே பல திட்டங்கள் ஒப்புதலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக, அக்டோபர் 1, 2025 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த இயக்கத்தை அறிவித்தார்.
பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டபடி, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விதைகளை உருவாக்கி வணிக ரீதியில் கிடைக்கச் செய்வது, பருப்புகளில் புரதச் சத்தை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு மற்றும் மேலாண்மையை மேம்படுத்துவது, விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய ஐந்து அம்சங்களுக்கு இந்த இயக்கம் முக்கியத்துவம் அளிக்கிறது.
2025-26 முதல் 2030-31 வரையிலான ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் இந்த இயக்கத்துக்கு மொத்தம் ரூ.11,440 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். 2023-24-ஆம் ஆண்டில் 242 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த பருப்பு உற்பத்தியை, 2030-31-ஆம் ஆண்டுக்குள் 350 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 45 சதவீத உயர்வாகும்.
இதே காலகட்டத்தில், பருப்பு சாகுபடிப் பரப்பை 275 லட்சம் ஹெக்டேரிலிருந்து 310 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கவும், ஒரு ஹெக்டேருக்கான சராசரி விளைச்சலை 881 கிலோவிலிருந்து 1,130 கிலோவாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாகுபடிப் பரப்பை 13 சதவீதமும், விளைச்சலை 28 சதவீதமும் அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.
இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவடையும் நிலையில், பருப்பு சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் விளைச்சலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில் 277.2 லட்சம் ஹெக்டேராக இருந்த பருப்பு சாகுபடிப் பரப்பு, 286.5 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 3.3 சதவீத உயர்வாகும்.
இதேபோல், பருப்பு உற்பத்தி 256.8 லட்சம் டன்னிலிருந்து 274.1 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது 6.7 சதவீத அதிகரிப்பாகும். ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல் 926 கிலோவிலிருந்து 957 கிலோவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் விளைச்சலில் 3.3 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
