சோழப் பேரரசரான ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா மற்றும் பிறந்தநாள் விழா அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான், பழக்கதோஷத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு இந்தத் திட்டத்தையும் ரத்து செய்து விடப்போகிறது எனப் பகடியாகத் தனது எக்ஸ் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
மு.க. ஸ்டாலின் பதிவு
2026 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காலை உணவுத் திட்டம், அம்பேத்கர் அயலக உதவித் திட்டம் உள்ளிட்ட திமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினாலும், சில டெண்டர்களையும் திட்டங்களையும் தவெக அரசு தற்போது ரத்து செய்து வருகிறது.
சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஸ்டாலின் கோரிக்கை
இந்தச் சூழலில் தான், இதனை விமர்சிக்கும் வகையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டிடக்கலை, போர்த்திறன் எனப் பல திறமைகளிலும் மாபெரும் உயரங்களை எழுதி தமிழர் பெருமையை உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட கடந்த 2026-ஆம் ஆண்டுதிமுக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று 1041-வது சதய விழா கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சோழர் காலத்தின் சிறப்புகளையும் பெரும் பழம்பெருமைகளையும் சமகாலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ரூ.56 கோடி மதிப்பில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திமுக விதை ஒன்றை விதைத்திருக்கிறது. அந்த விதையை தற்போதைய அரசு மரமாக்கிட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தவெக அரசு திட்டத்தை ரத்து செய்யுமா?
மேலும், அந்தப் பதிவில், “பழக்கதோஷத்தில் இந்தத் திட்டத்தையும் தமிழக வெற்றிக் கழக அரசு குறுகிய பார்வையுடன் ரத்து செய்து தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்ய மாட்டார்கள் என நம்புவோம்” எனக் கிண்டல் செய்யும் விதமாக அவர் பதிவிட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் தான், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
