ரூ. 634 கோடி லஞ்ச புகார்; வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் நேரு மனு

கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி-க்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அ.தி.மு.க எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய கடந்த பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் நேரு தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது நேரு தரப்பில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கடந்த தி.மு.க ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது எனவும், அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், கடந்த தி.மு.க அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது. வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கில், நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அந்த அவகாசத்தை பயன்படுத்தாமல், பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை என இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதோடு இந்த மறு ஆய்வு மனு மீது தீர்ப்பு அறிவிக்கும் வரை நேருவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீடித்தனர். 

தீர்ப்பு 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேபோல், மனுவை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு

இந்த நிலையில், நகராட்சி நிர்வாக பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மனுத் தாக்கல் செய்துள்ளார். முறைகேடு புகாரில் வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், கே.என்.நேரு தரப்பில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Source link