பிரபல இசையமைப்பாளர் தேவா (76) நேற்று (17-10-26) 76) மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் கானா பாடலை அறிமுகப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவரின் மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேவா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “தேவா அண்ணன், உண்மையிலேயே தேனிசைத் தென்றல் தான். அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் இந்த வயதில் இறக்குகிறார் என்றால் எப்படி? ஒரு நோய் இல்லை, எதுவுமே இல்லை.. திடீரென மாரடைப்பில் இறந்தது மனதை ரொம்ப புக்குது. அவர் குடும்பத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள், அந்த குடும்பத்திற்கே இவர் ஒருவர் தான். அவர் இறந்ததும் அந்த குடும்பம் நேற்று கதறுவதை பார்க்கும் போது, நம் குடும்பத்தில் நடந்தது போல் இருக்கிறது.
அவரிடம் ஒரு அன்பு இருக்கும். அவரை பார்த்தால் வாங்க தம்பி வடிவேலு என்பார். யாரை பார்த்தாலும் அன்பாகவும், பண்பாகவும் ரொம்ப பாசமாக பேசக்கூடிய ஒரு அருமையான மனிதர். அனைத்து உயிரினத்தையும் படைப்பது இறைவன் தான். அந்த இறைவன் கூப்பிட்டவுடன் அவர் போய்விட்டார். அந்த குடும்பம் ரொம்ப தைரியமாக தெம்பாக இருக்க வேண்டும். அந்த குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கிறேன். நான் பேசுகிற வலி தான் உலகத்தில் இருக்கிற அத்தனை தமிழ் மக்களுக்கும் உண்டான வலி. தேவா சாருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கிறேன்” என வேதனையுடன் பேசினார்.
