சென்னை விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,எனது டெல்லி பயணம் முழுக்க முழுக்கத் தனிப்பட்டது. உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐஏஎஸ் அவர்களின் மகள் திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நானும் எனது துணைவியாரும் டெல்லி செல்கிறோம். இதைத் தவிர வேறு எந்த அரசு நிகழ்ச்சியோ,பொது நிகழ்ச்சியோ கிடையாது இது எனது தனிப்பட்ட பயணம்.நான்கு நாள்களுக்கு முன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நானும் எழிலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கட்டடங்கள், விடுதிகள் ஆகியவற்றை மழை, வெள்ளத்தின்போது சென்னை மக்களுக்குப் பாதுகாப்பான புகலிடங்களாகப் பயன்படுத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தோம்.
அதேபோல், சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை என்.சி.சி. நாட்டு நலப்பணித் திட்ட என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், ஜே.சி.எஸ்., அபெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்களுக்குப் பாதுகாப்பான முறையில் உணவு, பால், ரொட்டி ஆகியவற்றை வழங்குவது குறித்தும் விவாதித்தோம்.
சென்னையில் உள்ள சுமார் 40 முதல் 50 கல்லூரிகளைச் சேர்ந்த என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளின் வாயிலாக, ஏறத்தாழ 250 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை மழை, வெள்ளத்தின்போது மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்துள்ளோம்.
வரும் 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் வெள்ளத்தின்போது மக்களுக்கு எவ்வாறு உதவுவது, சாரணர் படை, என்.சி.சி., கடலோரக் காவல்படை மற்றும் புயல் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மூலம் உள்ள சிறிய படகுகள், நீராவிப் படகுகள், உயிர்காக்கும் படகுகள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
சென்னையில் பெய்து வரும் மழை நல்ல மழைதான். நல்ல காற்றும் வீசுகிறது. இந்த மழையைத் தாங்கிக்கொள்ள முடியும். வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதிகளும் உள்ளன. ஆனால், சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு நாள் முழுவதும், அதாவது 8 மணி நேரம், 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தால் சென்னை தாங்காது.
இருப்பினும் மழையை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து மண்டலங்களிலும் அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். மாநகராட்சியின் உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள், ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
முதலில் மக்களிடம் லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் தொண்டாற்றும் மனப்பான்மை யாருக்கு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதிமுகவும் திமுகவும் ஊழலில் திளைத்து, பல்லாயிரம் கோடி ரூபாயைச் சுருட்டிய இயக்கங்கள்.
ஆனால், எங்கள் கூட்டணி அரசு என்பது தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம்பெற்றுள்ள மகத்தான கூட்டணி. இது நன்கு அறியப்பட்ட, கட்டுப்பாடான அரசியல் கட்சிகளைக் கொண்ட கூட்டணி. இதில் லஞ்சம், ஊழல் செய்பவர்கள் கிடையாது. மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறது. அந்த மனப்பான்மை இருந்தால் போதும். இதைப் பெரிதுபடுத்தி நான்தான் செய்தேன் என்று மார்தட்டிக்கொள்வதில் எந்தவிதமான உடன்பாடும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மக்களுக்குப் பணியாற்றவே வந்திருக்கிறோம். எங்களுடைய கடமை என்ன? மக்கள் எதற்காக எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதைச் செய்வதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்வோம்.
எங்களுக்குச் சட்டப்பேரவையில் இடம் கொடுத்தீர்களா? மாநகராட்சியில் இடம் கொடுத்தீர்களா? கூட்டுறவுச் சங்கங்களில் இடம் கொடுத்தீர்களா? உள்ளாட்சியில் இடம் கொடுத்தீர்களா? எதில் எங்களுக்கு இடம் கொடுத்தீர்கள்? உங்களிடம் போய் நாங்கள் பங்கு கேட்டோமா, கமிஷன் கேட்டோமா?ஊரில் நான்கு பேர் இருக்கிறார்களா, அவர்களை ஒரு வண்டியில் ஏற்றிவிடலாமா, ஒரு சாக்குப்பையில் கட்டிவிடலாமா என்று கேட்ட திமுகதான் இன்று எங்களுக்குப் பங்கு கொடுத்ததைப் பற்றிப் பேசுகிறது. பங்குக்குப் பெயர் போனவர்கள் அவர்கள்தான். பங்கு பேசுவதிலும், பங்கு வாங்குவதிலும் விலைபோனவர்கள் அவர்கள். அந்தக் கேள்விகளை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
Source link
