சென்னை: தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட, கிராம நிர்வாக அலுவலரை, மீண்டும் பணியில் அமர்த்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த எம்.ராமசந்திரன், பட்டா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
அதன் அடிப்படையில், 2025ம் ஆண்டு நவம்பரில் அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ராமசந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ”வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. ஏழு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
துறை ரீதியான விசாரணை தொடர்பாக, குற்ற குறிப்பாணை வழங்கவில்லை. ஏழு மாதங்களுக்கு மேலாக, மனுதாரரை தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க, எந்த சட்டப்பூர்வமான காரணமும் இல்லை,” என்றார்.
அரசு தரப்பில், மனுதாரரின் ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்ய, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ”லஞ்ச ஒழிப்பு விசாரணை, துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் வைத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி, நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வது சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, மனுதாரரின் ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்து, அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில், உடனே பணியமர்த்த வேண்டும்,” என, உத்தரவிட்டார்.
