இந்தியாவில் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் மிகப்பெரிய குமுறல் என்னவென்றால், வார இறுதி நாட்களிலும் மேலாளர்கள் போன் செய்து வேலை வாங்குவது மற்றும் ஓவர்டைம் வேலைக்குச் சரியான ஊதியம் தராததுதான். ஆனால், ஜப்பானில் வேலை செய்யும் அஜய் பாண்டே என்ற இந்தியர், அங்குள்ள மிகச்சிறந்த, ஊழியர்களுக்குச் சாதகமான ஒர்க் கல்ச்சரை பயங்கரமாக நக்கல் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
தாத்தா – பாட்டீஸ் ரெடியா? ரிட்டையர் ஆனா இந்தியால இருக்க பிடிக்கலயா? திரும்பி பாக்காம இந்த நாட்டுக்கு ஓடிருங்க
அஜய் பாண்டே வீடியோவில் புலம்பிய ‘நக்கல்’ காரணங்கள்
கடந்த 11 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வரும் அஜய், “இங்கு வேலை செய்வது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும், மீதி 2 நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கிறார்கள்” என்று நக்கல் செய்துள்ளார்.
மேனேஜர் போன் பண்ணவில்லை
எனது மேனேஜர் மீது எனக்கு உண்மையாகவே கோபம் வருகிறது. வார இறுதி நாட்களில் அவர் என்னை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை, ஒரு போன் கூடச் செய்வதில்லை. கடந்த 11 வருஷமா என் மேனேஜர் என்னை வீக்கெண்டில் ‘ஃப்ரெண்ட்- ஜோன்’ செய்து விடுகிறார். எப்போதாவது ஒருமுறை கூப்பிட்டு வேலை கொடுத்தாலாவது பரவாயில்லை, இதனாலேயே என் வீக்கெண்ட் முழுக்க கேம்பிங் (Camping) போவதிலும், பைக் ரைடு போவதிலும் வீணாகப் போகிறது” என்று புலம்பியுள்ளார்.
15 நிமிடத்திற்கு ஒருமுறை ஓவர்டைம் காசு
ஜப்பானின் ஓவர்டைம் முறையைக் கிண்டல் செய்த அவர், “இங்கு ஓவர்டைம் செய்ய அனுமதி கேட்பதே பெரும்பாடாக இருக்கிறது. அப்படியே கஷ்டப்பட்டு அனுமதி கொடுத்தாலும், நாம் வேலை செய்யும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் கணக்கு பார்த்து சரியாகப் பணம் கொடுத்து விடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
லட்டு டப்பாவுக்கு பதிலா 3 மாத சம்பளம் போனஸா?
மேலும், இங்குத் தீபாவளிக்கு ஒரு முறையான போனஸ் கூடத் தருவதில்லை. ஒரு லட்டு டப்பாவோ அல்லது ஒரு பேனாவோ கூடக் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, 2 அல்லது 3 மாதச் சம்பளத்தை அப்படியே போனஸாக வங்கிக் கணக்கில் போட்டு விடுகிறார்கள். இந்த ஜப்பான் வாழ்க்கையே எனக்குச் சுத்தமா பிடிக்கலப்பா என்று கூறியுள்ளார்.
நெட்டிசன்கள் கமெண்ட்
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், ஒரு பயனர், “இவர் வெற்றியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்” என்று கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர், “நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறது எங்களோட கனவு வாழ்க்கை” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
