லண்டனில் அஜித் – விஜய் சந்திப்பு… கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய தருணம் – இணையத்தில் வைரலாகும் போட்டோ – tamilnadu cm vijay ajith at the michelin le mans cup’ international car race goes viral

அஜித்தின் கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். 

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸ் டிராகக்கில் நடைபெற்ற ‘மிஷெலின் லே மான்ஸ் கப்’ (Michelin Le Mans Cup) சர்வதேசக் கார் பந்தயத்தை, அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 2026-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்றாக இந்த உலகளாவிய பந்தயம் நடைபெற்றது.

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்

தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் Motor Sports City அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் & பாதுகாப்பு அமைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் விஜய் – அஜித் சந்திப்பு

இப்போட்டியில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் தொழில்முறை பந்தய வீரருமான அஜித் குமார் களமிறங்கினார். தமிழ் சினிமாவின் இரு துருவங்களாகத் திகழ்ந்த அஜித்தும் விஜய்யும் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேடையில் நேரில் சந்தித்துக் கொண்ட நிகழ்வு, இணைய உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பந்தய களத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை நோக்கி ஓடிவந்த நடிகர் அஜித், அவரை உற்சாகத்துடன் கட்டியணைத்துத் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

34 ஆண்டுகால நட்பு – அஜித்தின் நெகிழ்ச்சி உரை

தொடர்ந்து இருவரும் கரங்களைக் கோர்த்தபடி, பந்தயத்தைக் காணத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான லண்டன் தமிழ் மக்களுக்கு அன்புடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், அரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் நிறைந்து காணப்பட்டது.அஜித் ரெடான்ட் பை விராஜ்’ அணிக்காக LMP3 Pro/Am பிரிவில் ஃபிரான்ஸ் வீரர் ரொமைன் வோஸ்னியாக்குடன் இணைந்து 16-ஆம் எண் ‘லிஜியர்’ காரை அஜித் இயக்கினார். பந்தயத்திற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித், முதலமைச்சரின் வருகைக்குச் சிறப்பு நன்றி தெரிவித்தார்.

34 ஆண்டுகளாக இணைந்தே பயணிக்கிறோம்

திரைத்துறையில் கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் இணைந்தே பயணித்து வருகிறோம். அவர் இன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமது நெருக்கடியான பயணத் திட்டத்திற்கு இடையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி சில்வர்ஸ்டோன் வந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இது போன்ற சர்வதேச மோட்டார் விளையாட்டுப் போட்டிகளையும் அதன் உள்கட்டமைப்புகளையும் இந்தியாவிற்கும், குறிப்பாகச் சென்னைக்கும் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் விருப்பம் என்று அஜித் குறிப்பிட்டார்.

தொழில்துறை வளர்ச்சி நோக்கில் இங்கிலாந்து பயணம்

இந்த ரேஸ் தொடரில் அஜித்துடன் இணைந்து இந்தியாவின் முன்னாள் ஃபார்முலா-1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 5.891 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மைதானத்தில் 2 மணி நேரம் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்று, வரும் அக்டோபர் மாதம் போர்ச்சுகல் நாட்டில் நடைபெறவுள்ளது.எலக்ட்ரிக் வாகனங்கள், மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் சர்வதேசக் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்காகவும் முதலமைச்சர் விஜய் 1 வாரம் அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அதேவேளையில், தமிழகத்தில் மோட்டார் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு முதல்வர் இந்த மைதானத்தைப் பார்வையிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Source link