கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுக்கான ‘லான் பவுல்ஸ்’ போட்டியை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மால்டா அணிகள் மோதின. இந்தியா சார்பில் ரூபா ராணி, பிங்கி சிங் பங்கேற்றனர். முதல் செட்டை 7-1 எனக் கைப்பற்றிய இந்தியா, 2வது செட்டை 3-4 என இழந்தது. பின் ‘டை பிரேக்கரில்’ அசத்திய இந்திய அணி 1-0 என வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோனோவால் புதுல், 2023ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற கனடாவின் ரியான் பெஸ்டர் மோதினர். முதல் செட்டை 5-4 என வென்ற சோனோவால், 2வது செட்டை 3-7 என இழந்தார். பின் ‘டை பிரேக்கரில்’ அசத்திய சோனோவால் 1-0 என வெற்றி பெற்றார்.
கடந்த முறை (2022) ‘லான் பவுல்ஸ்’ போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி என, 2 பதக்கம் கிடைத்தது.
