வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: அக்டோபர் 26 வரை உள் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 21) உருவாகும் எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, அக்டோபர் 26 வரை தமிழ்நாடு முழுவதும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக, வட மாவட்டங்களை விட தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 21) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வட கடலோரப் பகுதிகளில் வெளுத்துவாங்கிய மழை, தற்போது தெற்கு மற்றும் உள் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (அக்டோபர் 22) 20 செ.மீ வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபர் 26 வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றாலும், நாகப்பட்டினம், தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை கடும் வெப்பத்தை சந்தித்து வந்த மதுரை மற்றும் கரூர் போன்ற பல உள் மாவட்டங்களிலும் இந்த வாரம் கனமழை பதிவாகலாம்.

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை, இந்த மாதத்திற்கான மழைப்பற்றாக்குறையை போக்க உதவியுள்ளது. இதனால் மாநிலம் இதுவரை 12% உபரி மழையைப் பதிவு செய்துள்ளது. நேற்று (அக்டோபர் 20) மாலை 6 மணி வரை விருதுநகர், தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் கடலூர் போன்ற பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மண்டல வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) வங்கக்கடலில் மற்றொரு குறைந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள போதிலும், அது தமிழகத்தில் பெரிய அளவில் மழையை உருவாக்காது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், அரபிக்கடலில் நிலவும் வானிலை அமைப்பு, தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தன் தீவிரத்தைத் தக்கவைத்து, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளைக்குள் (அக்டோபர் 22) சோமாலியா கடற்கரையை நோக்கி நகரும். தற்போதைய வலுவான எல் நினோ நிலவரம், கடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கும் அடுத்தடுத்து வானிலை அமைப்புகள் உருவாவதற்கும் பங்களிக்கும் காரணிகளில் ஒன்றாகும். 

இருப்பினும், அடுத்தடுத்த வானிலை அமைப்புகளில் எதுவுமே புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் இன்று (அக்டோபர் 21) சென்னையில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Source link