வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: தமிழ் பெயர் ‘முரசு’ சூட்டி கௌரவிக்கும் இந்தியா

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவெடுத்துள்ளது. மேலும், தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளுக்கு மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியானது வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகர்ந்து, தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் 23-ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

இவ்வாறு உருவாகும் புதிய புயலுக்கு ‘முரசு’ என்று பெயரிடப்பட உள்ளது. தமிழ் மொழியிலிருந்து இந்தியா பரிந்துரைத்த இந்த பெயர், அடுத்து வரும் புயலுக்குச் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. இதன்பின்னர் உருவெடுக்கும் புயல்களுக்கு ஈரானின் ‘அக்வன்’ மற்றும் மாலத்தீவின் ‘கானி’ ஆகிய பெயர்கள் வரிசையாக வைக்கப்பட உள்ளன.

உலகளவில் 2004-ஆம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாகி வெவ்வேறு திசைகளில் நகரும்போது, அவற்றை மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே குழப்பமின்றி எளிதாக அடையாளப்படுத்துவதற்காகவே இத்திட்டம் தொடங்கப்பட்டது. உலக அளவில் புயல்கள் பற்றிய எச்சரிக்கைகளை வழங்கவும், அவற்றுக்கு பெயரிடவும் 6 வானிலை மையங்களுக்கும் 5 புயல் எச்சரிக்கை மையங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் புதுடெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்த மையம் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் வட இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவெடுக்கும் புயல்களுக்கு பெயரிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய 13 ஆசிய-பசிபிக் உறுப்பு நாடுகளுக்கு வானிலை முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு புயலுக்கு பெயரிடுவதற்கு 9 முக்கிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, தேர்வு செய்யப்படும் பெயர் அரசியல், மத நம்பிக்கைகள், கலாச்சாரம், இனம் மற்றும் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவோ அல்லது கொடூரமானதாகவோ இருக்கக்கூடாது.

மேலும், அந்த பெயர் சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும், அதிகபட்சமாக 8 எழுத்துகளுக்குள்ளும் அமைய வேண்டும். பெயர்களைப் பரிந்துரைக்கும் நாடுகள் அதற்கான சரியான உச்சரிப்பையும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பெயர்களை மீண்டும் வைக்க முடியாது என்பதும், தகுதியற்ற பெயர்களை நிராகரிக்கும் உரிமை 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link