வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மறுநாள் (26.10.2026) காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கைக்கான அறிவிப்பில், “மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலம் பாபட்லாவிலிருந்து கிழக்கே 1,100 கிலோமீட்டர் தொலைவிலும், அந்தமான் தீவுகளின் விஜயபுரத்திலிருந்து வடக்கு வடமேற்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு தென்கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுப்பெறக்கூடும். அதன்படி, வரும் 26ஆம் தேதி புயலாகவும், 27ஆம் தேதி தீவிரப் புயலாகவும், 28ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும். இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று மூன்றாம் நிலையை அடையக்கூடும். அதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே வரும் 28ஆம் தேதி முற்பகலில் மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் துறைமுகங்களுக்கும் அடுத்தடுத்து புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
