கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், இது மேக வெடிப்பு போன்ற மழையாக இருக்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) மாநிலத்தின் வட மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழையுடன் பரவலான மழை பெய்து வருகிறது. அக்டோபர் 23-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கடுத்தபடியாக கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு வானிலை மையங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது.
கொடைக்கானல், சென்னை எண்ணூர் துறைமுகம், பழனி மற்றும் திருச்சியில் உள்ள மணப்பாறை உள்ளிட்ட பல இடங்களில் 4 செ.மீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த இந்த மழை காரணமாக, இந்த மாதத்தில் மாநிலத்தின் மழைப்பொழிவு பற்றாக்குறை 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது இயல்பான மழைப்பொழிவு என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. கடலூர் மற்றும் திருச்சி உட்பட குறிப்பாக வடக்கு மற்றும் உள் மாவட்டங்களான 17 மாவட்டங்களுக்கு மண்டல வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் அக்டோபர் 23 வரை கனமழை தொடரும். நீலகிரி மற்றும் தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அக்டோபர் 20 அன்று 20.4 செ.மீ வரை மிகக் கனமழை பெய்யக்கூடும்” என்றார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சில பகுதிகளில் மிதமான மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மழைப்பதிவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், வட சென்னையில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை சுமார் 100 மி.மீ மழை பதிவானதை, மேகவெடிப்பு போன்ற மழை என்று கூறியுள்ளார். இதில் ஒரு மணி நேரத்தில் கார்கில் நகரில் 109.20 மி.மீ, சாத்தங்காட்டில் 106.80 மி.மீ மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மாப்பேட்டில் 100.80 மி.மீ மழை பதிவானது. என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திருவெற்றியூர் 93, பாரிஸ் 77.10, கத்திவாக்கம் 75.90 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை ஆலங்குடியில் 74.40 மி.மீ, சென்னை மணலி 66.60 மி.மீ, மாதவரம் 64.20 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
