நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக கூட்டரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துணை வேந்தர் சந்திரசேகர்,
28-ம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு, நேரடியாக 871 பேருக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் 37,877 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர். மேலும், முக்கியப் பிரமுகர்கள் சிலரும் இந்த விழாவில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் அகர்வால், மும்பை மண்டல துணை காவல் ஆணையர் ராகா சுதா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பு நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி திரிவேணி உள்ளிட்டோர் முனைவர் பட்டம் பெற உள்ளனர். பட்டமளிப்பு விழா நடைமுறைகள் குறித்து விளக்கிய துணை வேந்தர், முதலாவதாக வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக: தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் இசைக்கப்படும் என்றார்.
இந்த விழாவில் ஆளுநர் பங்கேற்பதால், ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) கொடுத்துள்ள உறுதியான உத்தரவின்படியே இந்த வரிசையில் பாடல்கள் பாடப்பட உள்ளன. இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று துணை வேந்தர் தெரிவித்தார்.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவே பாடப்படும் எனத் துணை வேந்தர் முன் கூட்டியே அறிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதாகவும், அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
