புதுடில்லி: வந்தே மாதரம் பாடல் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ குற்றமாகக் கருதி சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலை முழுவதும் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அரசு நிகழ்ச்சிகள் துவக்கத்திலும், இறுதியிலும் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், இப்பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ சிறை தண்டனை கிடைக்க வழி வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார்.
தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற முக்கிய சின்னங்களுக்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதே இதன் நோக்கம்.இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட்) ,சந்தோஷ் குமார் ( இந்திய கம்யூனிஸ்ட் ) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
