”வரலாற்றில் முதன்முறையாக மனிதனைத் தாக்@ய வைரஸ்”; அதிர்ச்சியில் உலக நாடுகள்

இதுவரை கால்நடைகளை மட்டுமே பாதித்து வந்த ’சமோண்டோ’ வைரஸ் முதன் முறையாக மனிதரைப் பாதித்த நிலையில், அவர் உயிர் இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பிரான்ஸின், லியோன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிரமான வேறொரு நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர் அக்டோபர் மாத தொடக்கத்தில் உயிரிழந்தார்.  

’ஆர்த்தோபுன்யா’ குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், பசுக்கள், ஆடுகள் மற்றும்  குதிரைகள் போன்ற கால்நடைகளை மட்டுமே தாக்கும் தன்மை கொண்டவை. எனினும், இந்த வைரஸ் தற்போது 60 வயது முதியவர் ஒருவரைப் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ், நரம்பு மண்டலத்தைத்  தாக்கும் தன்மை கொண்டவை. இந்த தொற்றால், அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, தலைவலி, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிப்பு அடைந்ததன் காரணமாக அவர் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

எனினும், இது விதிவிலக்கான சம்பவம், இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து நேரடியாக மனிதருக்குப் பரவுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, பொதுமக்களுக்கு இதனால் தற்போதைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று பிரான்ஸ் நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.