புதுடில்லி: எல்லைப்புற நாகாலாந்து பிராந்திய ஆணையத்தை உருவாக்குவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ”இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சியை உருவாக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
டில்லியில் மத்திய அரசு, நாகாலாந்து அரசு மற்றும் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு இடையே ஒரு முக்கிய முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது கிழக்கு நாகாலாந்தின் 6 மாவட்டங்களுக்கு அதிக நிதி மற்றும் நிர்வாக சுயாட்சியை வழங்கும்.
எல்லைப்புற நாகாலாந்து பிராந்திய ஆணையத்தை உருவாக்க வழி வகுக்கும். இது அப்பகுதியின் நீண்டகால வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாகும், இது குறிப்பாக கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும். இது மக்களுக்கு வாய்ப்புகளையும் செழிப்பையும் உருவாக்கும்.
இதனை நான் உறுதியாக நம்புகிறேன். இது வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
