– நமது சிறப்பு நிருபர்-
தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான, ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டு வரி, 29 சதவீதமாக உள்ளது. இது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அதிகம். விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின், மொத்த செயல்பாட்டு செலவில், எரிபொருளின் பங்கு, 50 சதவீதம் வரை உள்ளது.
வரி அதிகம் இருப்பதால், விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதுடன், தமிழக நகரங்களுக்கு, புதிய விமான சேவைகளை தொடங்க, நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. விமான எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு, தமிழக அரசுக்கு, விமானநிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
விமானங்களுக்கு விற்கப்படும் விமான எரிபொருள் மீதான, மதிப்பு கூட்டு வரியை குறைத்து, தமிழக அரசின் வணிக வரித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னையில் எரிபொருள் நிரப்பும் விமானங்களுக்கு விற்கப்படும் விமான எரிபொருள் மீதான வரி, 29 சதவீதத்தில் இருந்து, 16 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
சென்னையை தவிர, கோவை, மதுரை உட்பட, தமிழகத்தின் பிற விமான நிலையங்களில், எரிபொருள் நிரப்பும் விமானங்களுக்கு விற்கப்படும் எரிபொருள் மீதான வரி, 29 சதவீதத்தில் இருந்து, ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 40,000 கிலோவுக்கு குறைவான எடை உடைய சிறிய விமானங்கள், சென்னை தவிர, தமிழகத்தின் பிற விமான நிலையங்களில், எரிபொருள் நிரப்புவதற்கான வரி, 5 சதவீதத்தில் இருந்து, ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு, வரும் நவ., 1ம் தேதி முதல் அமலுக்கு வந்து, 2027 அக்., 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும், விமான நிறுவனங்களிடம் இருந்து, விமான பயணம் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிவிப்பு படிவத்தை வாங்கி, மாதாந்திர வரி அறிக்கையுடன், மதிப்பீட்டு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வரி குறைப்பால், தமிழகத்தில் விமான டிக்கெட் விலை குறையவும், விமான போக்குவரத்து சேவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
வரலாற்று மைல்கல்!
அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகளுக்கான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் வெறும் 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பின் மூலம், விமானப் பயணத்தை மேலும் எளிதாக்குவதற்கும், நமது பிராந்திய விமான நிலையங்களை அதிக போட்டித்தன்மை கொண்டவையாக மாற்றுவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
குறைந்த செயல்பாட்டுச் செலவுகள், விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சென்னைக்கு அப்பாலும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தவும் ஊக்கமளிக்கும். இதன் விளைவாக, நமது நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து மேம்படும்; சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஊக்கம்பெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வணிகங்களுக்கும் பயணிகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். முதல்வர் விஜய் தலைமையின் கீழ், நாங்கள் ஒரு வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலை உருவாக்கி வருகிறோம். இது பல்வேறு பகுதிகளை ஒன்றிணைப்பதோடு, தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு கீர்த்தனா கூறியுள்ளார்.
