வர்த்தக ஒப்பந்தத்தால் கிடைத்தது பலன்; திருப்பூர் ஆடை முதல் ஆம்பூர் ஷூ வரை… நியூசிலாந்தில் புதிய ஏற்றுமதி வாய்ப்பு

-நமது நிருபர்-

இந்தியா – நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழகத்தின் பின்னலாடை, தோல் பொருட்கள், ஷூ, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து தொழில் துறையினர் தெரிவித்ததாவது:

இந்தியா- நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், கடந்த அக்., 20ம் தேதி அன்று அமலுக்கு வந்தது. இதன்படி, நாட்டில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு முழு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்சம் 10 சதவீத சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வாய்ப்பு

இந்த ஒப்பந்தத்தால், திருப்பூர் பின்னலாடைகள், ஆம்பூர் தோல் பொருட்கள், ஷூ, சென்னை வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் விற்பனை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சுங்கவரி நீக்கப்பட்டுள்ளதால், வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தயாரிப்புகளுடன் விலையில் போட்டியிட தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, பருத்தி டி-சர்ட்டுகள், பின்னலாடைகள், ஸ்வெட்டர்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஈரோட்டில் உற்பத்தியாகும் மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், முருங்கை, மசாலா பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகலாம். கடல் உணவு ஏற்றுமதியாளர்களும் இந்த வரிச்சலுகையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தரச்சான்றிதழ் சவால்

சுங்கவரி விலக்கு மட்டுமே ஏற்றுமதி ஆர்டர்களை உறுதி செய்யாது. பொருட்களின் உற்பத்தி நாட்டை நிரூபிக்கும் விதிகள், தரச்சான்றிதழ், சுற்றுச்சூழல் நிபந்தனைகள் மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவை சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய சவால்களாக உள்ளன.

நியூசிலாந்து சந்தையின் தேவைக்கு ஏற்ப பொருட்களை தயாரிப்பதுடன், அந்நாட்டு வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்துவதும் அவசியம்.

தமிழக அரசும், ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகளும் சுங்கவரி விலக்கால் அதிக பயன் பெறக்கூடிய பொருட்களை அடையாளம் கண்டு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சந்தை தொடர்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு தொழில் துறையினர் தெரிவித்தனர்.

ஏற்றுமதி வாய்ப்பு உள்ள பொருட்கள்.

*பின்னலாடைகள், டி-சர்ட்டுகள், ஸ்வெட்டர்கள்.

*தோல் பொருட்கள், காலணிகள்.

*வாகன உதிரிப்பாகங்கள், பொறியியல் பொருட்கள்.

*மஞ்சள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள்.

*மீன், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள்.

*மசாலா பொருட்கள், தேன் மற்றும் பழங்கள்.

Source link