வளைகுடா நாடுகளில் தொடரும் சோகம்: 1,340 இந்தியர்கள் தற்கொலை; எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

கடந்த 3 ஆண்டுகளில் (2023–2025) வளைகுடா நாடுகளில் மட்டும் ஆயிரத்து 340 இந்தியக் குடிமக்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என வெளியுறவு அமைச்சகம் (MEA) நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சத்பால் பிரஹம்சாரி மற்றும் ஜெய் பிரகாஷ் ஆகியோர் வெளிநாடுகளில் இந்தியர்களின் இறப்பு குறித்த ஆய்வு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இத்தகவல்களை எழுத்துப்பூர்வமாக அளித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

2023 முதல் 2025 வரையிலான காலத்தில் உலக அளவில் வெளிநாடுகளில் 1,900-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். இதில் 70% அதிகமான வழக்குகள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளிலேயே பதிவாகியுள்ளன.

வளைகுடா நாடுகளில் தற்கொலை விவரம்; 

ஐக்கிய அரபு அமீரகம் (UAE): 511 பேர்

சவூதி அரேபியா: 354 பேர்

குவைத்: 162 பேர்

ஓமன்: 146 பேர்

பஹ்ரைன்: 101 பேர்

கத்தார்: 66 பேர்

மற்ற நாடுகளில் மலேசியாவில் 131 பேரும், அமெரிக்காவில் 62 பேரும் தற்கொலை செய்துள்ளனர். மேலும் இத்தாலி, கனடா மற்றும் பல்கேரியா/இங்கிலாந்து போன்ற நாடுகளில் தலா 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 39,000-க்கும் அதிகம் ஆகும். வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி முக்கிய வளைகுடா நாடுகளின் விவரம்:

பணிபுரியும் இடங்களில் ஏற்படும் விபத்துகளில் கனடாவில் 40 பேரும், சிங்கப்பூரில் 32 பேரும், அமெரிக்காவில் 46 பேரும், மாலைத்தீவில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பிற்கான துல்லியமான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாத போதிலும், வெளி நாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக, ‘எமிகிரேஷன் செக் ரிக்பயர்டு’ (ECR) பிரிவின் கீழ் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு ‘பிரவாசி பாரதிய பீமா யோஜனா’ (PBBY) காப்பீட்டுத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளுக்கு ரூ.275 அல்லது 3 ஆண்டுகளுக்கு ரூ.375 கட்டணத்தில், விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Source link