சுப. உதயகுமாரன்
கேள்வி: வணக்கம் ஐயனே. உலகம் முழுவதும் பேடிகள், பித்துக்குளிகள், பிற்போக்குத்தனமானவர்கள் தலைவர்களாக முகிழ்த்து தகாதவற்றைச் செய்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டிலும் ஒரு மாபெரும் தலைமைப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தலைவர்களின் தேவை பற்றிப் பேசி, தலைமைத்துவத்தின் இன்றியமையாமையைத் தாங்கள் அழகாகத் தெளிவு படுத்தியிருக்கிறீர்களே ஐயா?
திருவள்ளுவர்: ஆம், மகனே. அஃது ஓர் எளிய உண்மைதானே?
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
நிலைத்திருக்கும் வீரர்கள் பலரைப் பெற்றிருந்தாலும், ஒரு படைக்குத் தலைமையேற்போர் இல்லாமல் அதனை வழிநடாத்துவது என்பது இயலாத விடயம்தானே?
கேள்வி: உண்மைதான் ஐயனே! சமூக-பொருளாதார-அரசியல் தளங்கள் எல்லாவற்றிலும் தலைமக்கள் இன்றியமையாதவர்கள்தான். உரிய உயரிய தலைமை இல்லாமல் பல நாடுகள் சீர்குலைந்து போய்விடுகின்றனவே? ஒரு நாட்டில் தலைவருக்கான தேவை பற்றிச் சொல்வீர்களா ஐயா?
திருவள்ளுவர்: உறுதியாக மகனே!
ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமை வில்லாத நாடு.
நல்லதொரு அரசன் அமையப் பெறாத நாடு அனைத்து நன்மைகளையும் பெற்றிருந்தாலும் அவற்றால் பயனொன்றும் இராது.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்.
நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்கள் தலைவன் என்று கருதி மதிக்கப்படுவான்.
கேள்வி: இன்றைய தமிழகத்தில் இம்மாதிரியான “இறை” ஒருவரை தலைவராகப் பெறுவது அரிதாகிவிட்டிருக்கிறதே ஐயனே? தமிழக அரசியல், அறிவியல், ஆன்மிகம், கலை, கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதல் தரமானவர்கள் அதிகமாக இல்லாததால் மூன்றாம் தரமானவர்களே தலைமைப் பொறுப்புக்களைப் பிடித்துவைத்துக்
கொண்டிருக்கின்றனர் அப்பனே.
திருவள்ளுவர்: முதல் தரமானவர்களை எளிதில் கண்டுணர முடியும்; உரிய பயிற்சிகளுடன், முயற்சிகளுடன் அவர்களை வளர்த்தெடுக்கவும் முடியும், மகனே.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
தெளிவான கருத்துகளைத் திறம்படச் சொல்பவர், சோர்வற்றவர், அச்சமில்லாதவர் ஒருவரை பிணக்கு ஒன்றில் வெல்வது என்பது எல்லோருக்குமே அரிதானது.
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
பிறரோடு பொருந்தி நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னைப் பெரியவனாக நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறவன் மிக விரைவாக அழிந்து போவான்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
செயல்பட எண்ணும் ஒருவர் மனஉறுதி உடையவராக இருந்தால், அவர் எண்ணிய காரியங்களை எண்ணியவாறே அடைந்து விடுவார்.
கேள்வி: ஐயனே, சற்றொப்ப இருபத்தைந்து அதிகாரங்களில் (39—63) ஓர் அரசனின் தலைமைப் பண்புகள் பற்றியும், அத்தலைமைப் பண்புகளின் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். ஒரு தலைவரின் சில முக்கியமான குணாதிசயங்களைச் சொல்வீர்களா, தயவுசெய்து?
திருவள்ளுவர்:
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் தலைமை பற்றிய கருத்துக்கள் இருந்தாலும், ‘இறைமாட்சி’ எனும் அதிகாரத்தில்தான் ‘இறை’ பற்றியும் அவரின் தகுதிகள் பற்றியும் அதிகம் பேசியிருக்கிறேன் மகனே.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் கொஞ்சமும் குறைவுபடாமல் பொருந்தியிருத்தலே ஓர் அரசனுக்கு உரிய இயல்பாகும்.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
காலம் தாழ்த்தாமல் செயல்படும் தன்மை, கல்வி, துணிவு எனும் மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் தலைவனுக்கு நீங்காமல் இருக்க வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்ந்து கொள்வதே நல்லது.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
கேள்வி: அற்புதம் ஐயா. இவ்வளவு விரிவாக, ஆழமாக, அழகாகத் தலைமைத்துவம் பற்றி யாராலும் விவரிக்க இயலாது. தலைமைக்கும் ஆட்சிமுறைக்குமானத் தொடர்பு பற்றி விளக்குங்களேன் ஐயனே?
திருவள்ளுவர்: உறுதியாக மகனே. செங்கோன்மை–கொடுங்கோன்மை பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
ஓர் அரசனுக்குப் புகழ் நிலைபெறக் காரணம் நேர்மையான செங்கோல் முறையாகும். அந்தச் செங்கோன்மை இல்லாமற் போனால், அரசனுக்குரிய புகழும் ஒளியும் நிலைபெறாமல் அழியும்.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
கேட்பவர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, யாரிடத்தும் அன்பு செலுத்துவது, நீதி தவறாமல் ஆட்சி செய்வது, துன்புறும் மக்களைப் பாதுகாப்பது ஆகிய நான்கு சிறப்புக்களையும் கொண்ட ஓர் அரசன் மற்ற அரசர்களுக்கு ஓர் ஒளிவிளக்குப் போன்றவன் ஆவான்.
கேள்வி: ஒரு தலைவரின் தனிப்பட்ட இயல்புகள் பற்றிச் சொல்வீர்களா ஐயனே?
திருவள்ளுவர்: உறுதியாக மகனே.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
தன் இன்பத்தை விரும்பாமல், தான் செய்ய வேண்டிய செயல்களை மட்டுமே விரும்புகிறவன், தன் உறவினர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
நாட்டை ஆளும் தலைவர்களின் உறவும் உதவியும் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர்கள் வாழ்க்கையில் எந்தவொரு சிறந்த பயனையும் அடைய முடியாது.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
பொருள் கொடுக்காத கருமித்தனமும், மாண்பில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடாத குற்றங்களாகும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
முதலில் தன் குற்றத்தை நீக்கிக் கொண்டு, அதன் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராய்ந்து நீக்குபவராக விளங்கும் தலைவருக்கு எந்தக் குற்றமும் உண்டாகாது.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
எளிதில் சந்திக்கக் கூடியவனாகவும், கடுமையாகப் பேசாதவனாகவும் ஓர் அரசன் இருந்தால், அவனது நாட்டை உலகம் மேலாகப் புகழ்ந்து பேசும்.
கேள்வி: ஒரு தலைவனுக்குப் பேச்சு அவ்வளவு முக்கியமானதா ஐயனே!
திருவள்ளுவர்: அதில் எவ்வித ஐயமும் இல்லை மகனே.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்லும் வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: பேச்சு போலவே ஒரு தலைவனுக்கு வேறு என்ன வேண்டும் ஐயா?
திருவள்ளுவர்: பேச்சு மட்டும் போதாது மகனே. உளஉறுதி அதைவிட முக்கியமானது.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
மன ஊக்கமே ஒருவனுக்கு உரிய நிலையான செல்வம் ஆகும்; மற்றைப் பொருள் செல்வமோ நிலைநிற்காமல் அழிந்துவிடும்.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
உடல் முழுக்க அம்புகள் பாய்ந்து புண்பட்ட யானை உறுதி தளராமல் பெருமையோடு நிற்பது போல, ஊக்கமுடையவர் அழிவும் துன்பமும் வந்தாலும் மனம் தளர மாட்டார்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பம் வந்த போது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
கேள்வி: ஒரு தலைவர் கைக்கொள்ள வேண்டிய சில முக்கியமான உத்திகள் என்னென்ன ஐயனே?
திருவள்ளுவர்: முதலில் தகுதியானவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிறரையும் தலைவர்களாக்கும் விதத்தில் சரியான நபர்களை ஆராய்ந்து அவர்களின் திறமைக்கேற்ப பணிகளை ஒப்படைக்க வேண்டும். இந்த அணிசேர்ப்பும், பணிப்பகிர்வும் முக்கியமானவை.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
வந்த துன்பத்தை நீக்கி, இனிமேல் அத்தகைய துன்பம் வராதவாறு முன்கூட்டியே காக்கவல்ல பெருமை உடைய சான்றோர்களைப் போற்றித் துணையாகக் கொள்ள வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை, இந்தக் காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று நன்கு ஆராய்ந்தறிந்த பின்னரே, அந்தச் செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரண்டையும்விட முக்கியமானது செயலாற்றும் திறன்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
எத்தகைய மன உறுதி பெற்றவராக இருந்தாலும், செய்யும் காரியத்தில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பி ஏற்காது.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்த ஒரு செயலில், சோர்வு கொள்ளாமலும், காலம் தாழ்த்தாமலும், துணிச்சலோடு விரைந்து செயல்பட்டு முடிக்க வேண்டும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
புகழையும், நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டுவிட வேண்டும்.
கேள்வி: இறுதியாகத் தலைமையேற்றுச் செயல்படுவதில் மனங்கொள்ள வேண்டிய விடயங்கள் வேறென்ன உள்ளன ஐயனே?
திருவள்ளுவர்: காலந்தாழ்த்தாமல், சோர்வின்றிச் செயல்படுவதும், இடமறிதலும் மிக முக்கியமானவை மகனே.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கேற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல அமைதியாக இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.
கேள்வி: இடமறிதலையும் குறிப்பிட்டீர்களே ஐயனே?
திருவள்ளுவர்: ஆமாம், மகனே. இடமறிந்து இயங்குவது மிகவும் முக்கியமானது.
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
ஒரு செயலைச் செய்யத் தேவையான விடயங்கள், அதற்கேற்ற காலம், அதனைச் செய்யும் முறை மற்றும் செய்ய முடியாதென்று கருதப்படும் அரிய செயல் ஆகிய அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்க வல்லவரே சிறந்த அமைச்சர் ஆவார்.
கேள்வி: மிக்க நன்றி ஐயனே! தாங்கள் எடுத்துரைக்கும் தலைமைப்பண்புகளில் அஞ்சாமை, ஊக்கமுடைமை, வினைத்திட்பம், மடியின்மை, பேச்சுத்திறன், அணிசேர்ப்பு, பணிப்பகிர்வு, காலம் தாழ்த்தாமை, காலமறிதல், இடமறிதல் போன்றவை முக்கியமானவை என்பதை உணர்கிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன் ஐயா!
திருவள்ளுவர்: தானை தலைமக்கள் தாராளமாய்ப் பெற்று தமிழும், தமிழரும், தமிழ்நாடும் வாழ்க மகனே!
(மு.வ. மற்றும் கலைஞர் கருணாநிதி உரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.)
(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; பச்சைத் தமிழகம் கட்சியின் தலைமைப் பணியாளர்.)
