புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
மத்திய அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, டெல்லி காவல் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜக ஆட்சி செய்யும் மாநில காவல் துறையினர் மாணவர்கள் மீது பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால், நாங்கள் மீண்டும் உடனடியாக வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.
மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் தலையிட்டு, மாணவர்கள் மீது எவ்வித வழக்குகளும் தொடரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ரங்கா தெரிவித்துள்ளார். இதனிடையே, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து சிஜேபி நிர்வாகிகள் நடனமாடிக் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இத்தகைய கொண்டாட்டங்கள் தேவையா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், “தற்போதைய ஜென் ஸீ தலைமுறையினரின் போராட்ட வடிவத்தை மூத்த அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை.
நாங்கள் நடனமாடிக் கொண்டே எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்வோம், கோல்டு காபியை சுவைத்துக் கொண்டே கூட்டத்தை திரட்டவும் செய்வோம். முந்தைய தலைமுறையினர் நினைக்கும் அதே பாணியில் தான் போராட்டங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
