-நமது சிறப்பு நிருபர்-
சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், கிரானைட் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, 61, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63, கணேசன்,52, உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரானைட் வீரமணி மீது, இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை, பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கிரானைட் வீரமணி மீதான இரண்டாவது போக்சோ வழக்கில், அவரை ஏற்கனவே, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
அவரது வயது மற்றும் உடல்நிலையை கருதி, அப்போது புழல் சிறை வளாகத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல, கணேசனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
பணப்பரிவர்த்தனை தொடர்பாக, கிரானைட் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிபதி, இரண்டு நாட்கள் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, புழல் மத்திய சிறையில் இருந்த மூவரையும், சிறப்பு புலனாய்வு குழுவினர், இன்று காலை பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கு தேவையான இடவசதி போன்றவற்றை கருத்தில் வைத்து, பெரவள்ளூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
பெரவள்ளூர் காவல் நிலையத்தில், மூவரிடமும் தனித்தனியாகவும், ஒன்றாக வைத்தும், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வழக்கை முடக்க யாருக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டது,
பணப்பரிவர்த்தனைக்கு உதவியவர்கள் யார், பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது உட்பட, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மூவரிடமும், விசாரணை நடக்கிறது.
வீரமணி மகளுக்கு ‘சம்மன்’
கிரானைட் வீரமணியின் மகள் அர்ச்சனாவும், இவ்வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளார். அதனால், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, காவல் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், அர்ச்சனா சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டு, நேற்று சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பின், அர்ச்சனாவை சிறப்பு புலனாய்வு குழுவினர், எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி, அர்ச்சனாவுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
