”வாடகைக்கு வாய்”; இன்ட்ரோவெர்ட்டுகளுக்காக களமிறங்கிய தனி ஒருவன்!

பெரும்பாலான மக்கள் சாதாரண விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக, பொது இடங்களில் யார் என்றே தெரியாத நபர்களிடம் கூட மணிக்கணக்கில் சண்டைப்போட்டுகொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்முக சிந்தனையாளர் (இன்ட்ரொவெர்ட்) குணம் கொண்டவர்கள் யாரிடமும் அவ்வாறாகச் சண்டையிடுவதில்லை. பெரும்பாலும், அவர்களுக்கு மற்றவர்களிடம் சண்டையிடுவதில் விருப்பம் இருப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு சண்டைபோடவும் தெரியாது.  எனவே, இது போன்ற குணமுடையவர்கள் பல நேரங்களில் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. 

குறிப்பாக, பணம், பொருள் மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை இழந்துவிடுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு உதவும் வகையில், ஒருவர் வெளியிட்டுள்ள விளம்பரம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 

சீனாவின், குவாங்சோவை சேர்ந்த ஒரு நபர் யாருக்காவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்காக வாதடி உரிய நீதியைப் பெற்றுத்தருவதாகக் கூறுகிறார். இதற்காக அவர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துகொள்கிறார்.   

அவர், ’உங்களுக்காக வாதாடுகிறேன்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவர் அலுவலக சண்டைகள் முதல் மருத்துவமனை சண்டைகள் வரை அனைத்துவிதமாகப் பிரச்சனைகளுக்கும் வாதாடித் தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறுகிறார். இவர் காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை இந்த பணியைச் செய்து வருகிறார்.  
சம்பந்தப்பட்டவர்கள் எதிரிகளிடம் சண்டையிட்டால், ஒருவேளை அந்த சண்டை கைகலப்பில் முடிந்தால் அதனால் அவர்கள் காவல்நிலையத்திற்குச் செல்லவேண்டி வரும், அதோடு மருத்துவமனைக்கும் செல்ல நேரிடும். இதனால், அவர்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்படும். அதனால், அவர் இதுபோன்ற பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்த்துத் தருவதாகக் கூருகிறார்.   

தனது கட்சிக்காரர்களுக்கு ஆதரவாக இவர் எதிரிகளிடம் சண்டைபோட்டாலும், அது ஒரு போதும் கைகலப்பாக மாறியதில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த பணியின்போது ஒரு போதும் கைகலப்பு ஏற்பட்டதில்லை. காரணம் முதலாவதாக நாங்கள் சண்டையிடுவதில்லை. இரண்டாவதாக நாங்கள் கெட்டவார்த்தை பேசுவதில்லை. அமைதியான பேச்சுவார்த்தையின் மூலமாகவே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார். மேலும் இந்த வேலைக்காக அவர் 188 சீன யுவான்களை (தோராயமாக ரூ.2686) சம்பளமாகப் பெறுகிறார். சண்டைபோடத் தெரியாதவர்களுக்காகச் சண்டைபோடும், இந்த புதுவிதமான முயற்சி மக்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது.