சென்னை,
பாலிவுட்டில் இருந்து தமிழ், தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தனது முதல் தெலுங்குப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு, ராம் பொதினேனி நடித்த ‘இஸ்மார்ட் சங்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தமிழில், ‘ஈஸ்வரன்’, ‘பூமி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் மட்டுமின்றி, கிளாமரிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
தற்போது நிதி அகர்வால் பான்-இந்தியா (Pan-India) படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இரண்டு பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. பவன் கல்யாணுடன் நடித்த ’ஹரி ஹர வீர மல்லு’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இந்தப் படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பிரபாஸ் நடிப்பில் வெளியான ’தி ராஜா சாப்’ படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இருப்பினும், இந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நிதி அகர்வாலுக்கு இப்போது ஒரு புதிய வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது. ‘இறுமுடி’ படத்திற்குப் பிறகு, ரவி தேஜா மற்றும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க நிதி அகர்வாலின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
திறமையும் அழகும் ஒருங்கே கொண்ட நிதி அகர்வால், இந்த புதிய படத்தின் மூலமாவது தனது வெற்றிப் பயணத்தைத் தொடருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
