– நமது நிருபர் –
நாளை மறுநாள், மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவதால், இறுதிகட்ட சம்பிரதாயங்கள் அனைத்து தொகுதிகளிலும் தொடங்கிவிட்டன. இந்த சம்பிரதாயத்திற்கு கட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், 5 முதல் 7 சதவீத ஓட்டுகளை இது ஈர்க்கக்கூடும் என்பது பட்டறிவு. இந்த தேர்தலில், நடிகர் விஜய் வரவால், பிரதான கட்சிகள், பெரும்பாலான தொகுதிகளில் சமநிலையில் இருப்பதாக உணர்கின்றன. 100 – 1,000 ஓட்டுகளில், வெற்றி – தோல்வி முடிவாகும் சூழல் உள்ளதால், இந்த சம்பிரதாயத்தை, பிரதான கட்சிகள் சிரத்தையாக செய்யத் தொடங்கி உள்ளன. அந்த வகையில், மற்ற தேர்தல்களை விட, அவர்களுக்கு இது மிகவும் ‘காஸ்ட்லி’யான தேர்தலாக உள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியான உடனேயே, நிறைய வேட்பாளர்கள், ‘எவர்சில்வர்’ பாத்திரம், 25 கிலோ அரிசி மூட்டை, பித்தளை குத்து விளக்கு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொடுத்தனர். அந்தந்த கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நினைவூட்டும் விதமாக 8,000 ரூபாய் மாதிரி கூப்பனை வழங்கி தி,.மு.க.,வினரும், 10,000 ரூபாய் ‘கியூ.ஆர்., கோடு’ கூப்பன்கள் வழங்கி அ.தி.மு.க.,வினரும், வீடு வீடாக ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தாலும், எதையும் பொருட்படுத்தாமல் கூப்பன் வினியோகம் களைகட்டுகிறது.
ரூ.5,400 கோடி
பிரதான கட்சிகள், ஒவ்வொரு தொகுதி வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப இலக்கு நிர்ணயித்துள்ளன. சராசரி வாக்காளர் எண்ணிக்கையை ஒத்துள்ள தொகுதிகளில் 1.50 லட்சம் பேரையும், அதிக வாக்காளர் உள்ள தொகுதிகளில் இரண்டு லட்சம் பேரையும், ‘கவனிக்க’ முடிவு செய்துள்ளன.
அதில், இப்போது அதிக பணம் செலவு செய்யக்கூடிய கட்சி, தலைக்கு 1,000 ரூபாய் வீதம், தொகுதிக்கு 15 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை பட்டுவாடா செய்ய உள்ளதாகவும்; பணபலத்தில் அடுத்த நிலையில் உள்ள கட்சி, தலைக்கு 500 ரூபாய் வீதம், தொகுதிக்கு 7.50 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை பட்டுவாடா செய்ய உள்ளதாகவும் அந்தந்த கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதற்கு தேவையான தொகை, நிர்வாகிகளிடம் ஏற்கனவே பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது என்றும், ஓட்டுச்சாவடி ஒன்றுக்கு 10 பேர் வீதம் ஒவ்வொரு கட்சிக்கும் வேலை செய்கின்றனர் என்றும் தெரிவித்தனர். கெடுபிடி அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் டிஜிட்டல் முறையில் கவனிப்பு நடக்கிறது.
இது, வேட்பாளர்களுக்கு கட்சி தலைமை வழங்கும் உதவி. இது தவிர, வேட்பாளர்களே தனியாக செலவு செய்யும் தொகையும் உள்ளது. சில தொகுதிகளில், சம்பிரதாய தொகை தலைக்கு 4,000 ரூபாய் வரை எட்டியுள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வெகு சில தொகுதிகளில், இரண்டாம் கட்ட பட்டுவாடாவையும் சேர்த்து இந்த தொகை 7,000 ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.
களத்தில் அதிகம் வேலை பார்க்கும் கட்சி, தினந்தோறும் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது. மிகவும் சவாலாக உள்ள தொகுதிகளில், வேட்பாளர்களுக்கான உதவி தொகையை, தலைமையே, தலைக்கு 1,000 ரூபாய் என்பதில் இருந்து, நிலவரத்திற்கு ஏற்ப 3,000 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. இந்த வகையிலேயே, பிரதான கட்சிகளின் தலைமைகள் மட்டும் கடைசி நேர சம்பிரதாயத்திற்காக செலவு செய்யும் தொகை, 5,400 கோடி முதல் 7,200 கோடி ரூபாயை எட்டும் என்று கட்சியினர் கணிக்கின்றனர்.
இவர்கள் மத்தியில் நடக்கும் கடும் போட்டியால், முதல் கட்டமாக ‘கவனித்து’ விட்டு, போட்டியாளர் எவ்வளவு ‘கவனிக்கிறார்’ என்பதை பார்த்து, அடுத்த கட்டமாக ‘டாப் – அப்’ கவனிப்பு செய்யும் போட்டியும் நடந்து வருகிறது.
பிரதான கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் விதமாக, ‘மேரே பாயியோ அவுர் பெஹெனோ’ கட்சியும், இந்த முறை கடைசி நேர சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கிறது. அவர்கள், தலைக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை வழங்கி வருகின்றனர். ஆனால், அந்த கட்சியில் பாதி வேட்பாளர்களுக்கு பண பலம் இல்லாததால், தலைமையின் உதவி வரும் என்று காத்திருக்கின்றனர்.
அதீத செலவு
சில தொகுதிகளில், கடும் போட்டி மற்றும் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காரணமாக, தண்ணீர் போல் பணம் செலவிடப்பட்டு வருகிறது. கரூரில், ஒரு தரப்பு, தலைக்கு ரூபாய் 4,000 மற்றும் இரண்டு எவர்சில்வர் குண்டான்களை கொடுக்கவே, எதிர் தரப்பு 5,000 ரூபாய் மற்றும் இரண்டு பட்டுப்புடவைகளை கொடுத்துள்ளது. அதனால், குண்டான் கொடுத்த தரப்பு, இப்போது ‘டாப் – அப்’ செய்து வருகிறது.
இப்படி, அதீத செலவு நடக்கும் தொகுதிகளாக கரூர், கோவை தெற்கு, திருச்சி மேற்கு, ஒரத்தநாடு, சேப்பாக்கம் — திருவல்லிக்கேணி, போடி ஆகியவற்றை, வருமான வரி துறையினர் மற்றும் தேர்தல்
ஆணையத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகிறன்றனர். இந்த தொகுதிகளில், பறக்கும் படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு, முழுமையான விவரங்களும் ஆதாரங்களுடன் திரட்டப்படுகின்றன.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சியிலும், தி.மு.க., வேட்பாளர் அஞ்சுகம் பூபதி போட்டியிட்ட தஞ்சாவூர் தொகுதியிலும் ஏராளமான பண புழக்கம் இருப்பதை கண்டறிந்த தேர்தல் ஆணையம், இரு தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தியது. அதேபோல, கடந்த 2019ல், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் பார்லிமென்ட் தேர்தலிலும் பண புழக்கத்தை காரணம் காட்டி தேர்தலை நிறுத்தியது.
அதே போல், இந்த ஆறு தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கிடைக்கும் ஆதாரங்களை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
