கேரளாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த சி.பி.எம் மத்தியக் குழு, முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை மட்டுமே மையமாகக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை அமைத்தது, அரசியல் கருத்துக்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்காதது மற்றும் “நாம் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு மென்மையான போக்கை கடைபிடிக்கிறோம் என்ற பிம்பம் உருவாகியது” ஆகியவையே தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த கட்சி, ஆட்சியை இழக்க நேரிட்டதற்கான காரணங்கள் என்று கூறியுள்ளது.
இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அதன் வாக்கு வங்கியை 2021-ல் இருந்த 44.44 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 37.44 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது. மேலும், இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் சி.பி.எம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 21.77 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் எல்.டி.எஃப் 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை வென்ற நிலையில், இந்த ஆண்டு 35 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சி.பி.எம் தனியாக அதன் இடங்களை 64-ல் இருந்து 26-ஆக குறைத்துக் கொண்டது.
கட்சியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து மத்தியக் குழு செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
“அரசியலை முன்னிலைப்படுத்தாமல், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மட்டுமே மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் திறம்பட அமையவில்லை. நவதாராளமய மற்றும் கார்ப்பரேட்-வகுப்புவாதக் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் பிரசாரத்துடன் வளர்ச்சி மற்றும் நலத்திட்டக் கொள்கைகளை நாம் ஒருங்கிணைக்காவிட்டால், மக்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைநிலை தொண்டர்களுக்கு புத்துயிரளித்து, மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவதன் மூலம் கட்சி தனது அடித்தளத்துடன் மீண்டும் இணைய வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது.
தனது ஆதரவு தளத்தை மீண்டும் பெற, கட்சி தனது பலமான அம்சங்களை வலுப்படுத்த வேண்டும், தவறுகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. “மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொண்டு, உழைக்கும் மக்கள் மீது யு.டி.எஃப் (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி) மற்றும் பா.ஜ.க அரசுகள் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே, அடிப்படை வர்க்கங்களின் நம்பிக்கையை நாம் மீண்டும் பெற முடியும் மற்றும் மக்களின் ஆதரவை வெல்ல முடியும்.”
வேட்பாளர்கள் தேர்வு
தளிப்பறம்பா மற்றும் பையனூர் உள்ளிட்ட சி.பி.எம்-ன் பாரம்பரிய கோட்டைகளில், காங்கிரஸ் ஆதரவுடன் அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றது உட்பட, வேட்பாளர்கள் தேர்வு குறித்து அந்த ஆய்வு அறிக்கையில், “இத்தகைய முடிவுகளில் ஈடுபட்ட மாநிலக் குழுவின் உயர் தலைமை, இந்த முடிவுகளால் ஏற்படும் பாதகமான விளைவுகளை மதிப்பிடத் தவறிவிட்டது மற்றும் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண உடனடியாகச் செயல்படத் தவறிவிட்டது. எனவே, சில தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தது மற்றும் போதுமான பெண்கள், சிறுபான்மையினர் அல்லது இளைஞர்கள் இல்லாதது தொடர்பான முக்கியப் பொறுப்பை மாவட்டக் குழுக்கள் மீது மட்டும் சுமத்திவிட முடியாது. மாநிலத் தலைமையே இந்தச் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
கட்சிக்குள் நாடாளுமன்றப் பதவிக்கான சுயநலப் போக்கு ஒரு ட்ரெண்டாக உருவெடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, “கட்சியின் மூன்று பாரம்பரிய கோட்டைகளில் கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தது, தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியையும், அதன் விளைவாக நமது மக்கள் ஆதரவு தளத்தில் ஏற்பட்டுள்ள சரிவையும் காட்டுகிறது. கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற பதவி விலகல்களுக்கு எதிராகப் போராடுவதும், பல்வேறு நிலைகளில் உள்ள தலைமைக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், நமது செயல்பாட்டு முறையைச் சீரமைப்பதற்கும் அவசர நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்” என்றும் கூறியுள்ளது.
பிரசாரம் முழுவதையும் விஜயனை மையமாகக் கொண்டு அமைத்தது குறித்து அறிக்கை கூறுகையில், “அரசை திறம்பட வழிநடத்திய விஜயன் என்ற தனிநபரை சுற்றியே முழுப் பிரசாரமும் சுழன்றது என்ற கருத்து நிலவியது. பிரசாரத்தை தனிநபர் மையப்படுத்தி, விஜயனை மையமாகக் கொண்டதன் மூலம், அவருக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட பிரசாரத்தை நடத்த யு.டி.எஃப்-க்கு நாமே அறியாமல் ஒரு வாய்ப்பை வழங்கினோம். இதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி மற்றும் யு.டி.எஃப்-ன் பிற்போக்குத்தனமான, ஆளும் வர்க்கச் சார்புநிலையை அம்பலப்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பை நாம் இழந்துவிட்டோம்.”
சிறுபான்மை வாக்காளர்கள்
சி.பி.எம் பா.ஜ.க-வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை திறம்பட முறியடிக்க முடியவில்லை என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. இது சிறுபான்மை வாக்காளர்கள் மத்தியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களில் ஒரு பிரிவினர் எல்டிஎப்பில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்தது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு எல்.டி.எஃப் அரசு நடத்திய உலக அய்யப்ப சங்கமத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செய்தியை வாசித்திருப்பதை கட்சி தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தீவிர இந்துத்துவா ஆதரவாளரான உத்தரப் பிரதேச முதல்வரின் செய்தியை வாசித்தது, கட்சியின் மதச்சார்பற்ற பிம்பத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதுடன், நமது தேர்தல் பிரசாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேச முதல்வரிடம் இருந்து செய்தி கோரப்பட்டதும், அதை வாசிக்க கட்சியின் அமைச்சர் ஒப்புக்கொண்டதும் குழப்பத்தை அளிக்கிறது. இதுபோன்ற செயல் மக்களுக்கு தவறான செய்தியை அனுப்பியதுடன், இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு நாம் மென்மையான போக்கை கடைபிடிக்கிறோம் என்ற பிம்பத்தையும் உருவாக்கியது,” என்று அறிக்கை கூறியுள்ளது.
சி.பி.எம் உடன் இணைந்து செயல்பட்டதாகக் கருதப்படும் ஈழவ சமூகத் தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசனின் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுகள் மற்றும் இந்த சர்ச்சை குறித்து சில சி.பி.எம் தலைவர்கள் செய்த அறிக்கைகளும் சிறுபான்மையினரை மேலும் தனிமைப்படுத்த பங்களித்தன என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்த அனைத்து தவறுகளும் ஒன்றாகச் சேர்ந்து, வகுப்புவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் நமது கட்சி சமரசம் செய்து கொள்கிறது என்ற தவறான எண்ணத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது” என்று அறிக்கை கூறியுள்ளது.
