துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், ‘சட்டசபையில் முதல்வர் விஜய் எலும்பை உடைத்து விடுவோம்’ என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மார்க்கண்டேயனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க., ஆட்சி அமைந்தது முதல், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து அரசு மீதும், முதல்வர் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
‘இந்த ஆட்சி ஆறு மாதத்தில் கவிழ்ந்து விடும்’ என, முன்னாள் அமைச்சரும், திருச்செந்துார் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஜாமின்
இதனால், முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசியதாக, கடந்த 3ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, அன்றே ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 18ம் தேதி நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., — எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் பேசும் போது, ”இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது. வரும் தேர்தல்களில், 5 சதவீத ஓட்டுகள் கூட பெற முடியாமல் விஜயும், அவரது கட்சியும் தோற்று போகும். ”முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா போன்றோர் தேர்தலில் தோற்ற போது, எதிர்க்கட்சி தலைவர்கள் நாகரிகமாக பேசினர்.
எலும்பு இருக்காது
”ஆனால், சட்டசபையில் தேடிக் கொண்டிருக்கிறேன்; உன் தகப்பனாரை என்று சொல்கிறானே… நான் கேட்கிறேன்… மானங்கெட்ட தமிழகத்தின் முதல்வர், உன்னை சட்டசபைக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?
”சட்டசபையை பூட்டுவதாக முதல்வர் பேசுகிறார். பூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது; உடைத்து அனுப்பி விடுவோம்,” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்து இருந்தார்.
இது தொடர்பாக, ‘மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, த.வெ.க., நிர்வாகிகள் தரப்பில் போலீஸ் ஸ்டேஷன்களிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று மூன்று பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் நேற்று காலை 6:00 மணியளவில், விளாத்திகுளம் அம்மாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் வீட்டிற்கு சென்றனர்.
சம்மன்
அவரிடம், வழக்கு விபரம் அடங்கிய சம்மனை போலீசார் வழங்கினர். அப்போது, ‘சபாநாயகர் அனுமதி இல்லாமல் விசாரணைக்கு அழைத்து செல்ல முடியாது; அதை வாங்கி வாருங்கள்’ என, போலீசாரிடம் மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
அப்போது, போலீசாருக்கும், மார்க்கண்டேயன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மார்க்கண்டேயனை கைது செய்த போலீசார், ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தை மறித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10:00 மணியளவில் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு மார்க்கண்டேயன் அழைத்து செல்லப்பட்ட தகவல் பரவியதும், கோவில்பட்டி தி.மு.க., – எம்.எல்.ஏ., கருணாநிதி, துாத்துக்குடி மேயர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் அவரை சந்திக்க முயன்றனர்.
போலீசார் அனுமதி மறுத்தனர். பகல் 11:30 மணியளவில், முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, அப்துல் வகாப் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் திரண்டனர். மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க., மாவட்ட செயலர் கீதா ஜீவன் ஆகிய நான்கு பேரை மட்டும் உள்ளே அனுமதிக்கும்படி, அவர்கள் கோரிக்கை வைத்தும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., சுதீர் நடவடிக்கையை கண்டித்து, அவர்கள் கோஷம் எழுப்பினர்.
காவல் துறையை கண்டித்து, கீதா ஜீவன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன், பிரதான சாலையில் தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, மயக்கம் வருவதால், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் காரில் புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,விடம் நடத்தப்பட்ட விசாரணை மாலை 6:45 மணிக்கு நிறைவடைந்தது. அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.
