விஜய் சேதுபதி வைத்த நம்பிக்கை; பாரி இளவழகன் நெகிழ்ச்சி!

பாரி இளவழகன் இயக்கி நடித்து ரம்யா ரங்கநாதன், ரம்பா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘அன்பே டயானா’. ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்வில் இயக்குநர் பாரி இளவழகன் கலந்து கொண்டு பேசுகையில், “வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்திற்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும் தான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனைகளும், கருத்துகளும் இருக்கும். ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு நல்ல திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள்தான். இந்தப் படத்தின் வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அதேபோல், ஜமா திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவை நான் மறக்க முடியாது. அந்தப் படம் வெளியானபோது உடனடியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அது நாளுக்கு நாள் மக்களிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நனவாக்கிய ரசிகர்களுக்கும், ஜமா படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அன்பே டயானா கதையை அவரிடம் பகிர்ந்தபோது, ‘உங்கள் தற்போதைய பயணத்திற்கு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுடன் இந்தப் படம் சரியான கூட்டணியாக இருக்கும்’ என்று கூறி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடமும் என்னைப் பற்றி நல்ல விதமாக பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆரம்பம் முதலே அவர் என் மீது வைத்த நம்பிக்கையே இன்று இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. 

ஒரு இயக்குநருக்கு தனது எழுத்தின் மீது தயாரிப்பாளர் முழுமையான நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய வரம். அன்பே டயானா படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நான் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தேன். எந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் முழுமையாக மதித்தார்.

கோபி இந்தக் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரை கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. முழு படப்பிடிப்பிலும் எந்தவித சிரமமும் கொடுக்காமல், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார். 

Source link