முதல்வர் விஜய் மற்றும் நடிகர் தனுஷ் தான் போட்டி என தனுஷ் ஆதரவாளர்கள் சொல்வது குறித்தான கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆரோக்கியமான போட்டி இருக்கட்டும் என கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ளார்
கோவை சரவணம்பட்டி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கான இலவச ‘கற்கை ஏ.ஐ’ மினி ஸ்கூல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த தனியார் நிகழ்வில் கலந்து கொண்டு மினி ஸ்கூலை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செயற்கை நுண்ணறிவு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் ‘கற்கை ஏ.ஐ’ மினி ஸ்கூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செயற்கை நுண்ணறிவின் அவசியத்தைப் புரிந்துகொள்ளவும், அன்றாட வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை உணரவும் இந்த முயற்சி பெரிதும் உதவும். இதனை அனைத்து தரப்பினும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று கனிமொழி கூறினார்.
பின்னர், தனுஷுக்கும் விஜய்க்கும் போட்டி இருப்பதாகத் தனுஷ் ரசிகர்கள் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழகம் அனைவரையும் வரவேற்கிறது வாருங்கள். ஆரோக்கியமான விவாதத்தை முன் வையுங்கள். யார் வேண்டுமானாலும் வரட்டும். இது ஜனநாயக நாடு ஆரோக்கியமான போட்டி இருக்கட்டும்” என கனிமொழி கூறினார்.
தொகுதியில் வெள்ளப் பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் இத்தனை நாட்களாகச் சந்தித்து வந்த அவதிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக எடுத்துரைப்பதுடன், மக்களும் நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்துகொள்கின்றனர். மேலும் பிரச்சினைகள் உள்ள இடங்களைக் கண்காணித்து வருகிறோம். மழை பெய்யும்போது வெள்ளநீர் தேங்கும் பிரச்சினைகளை இயற்கைச் சூழலில் உடனடியாகச் சரிசெய்வது சவாலானது. இரவு மழை பெய்தால் மறுநாள் காலையில் எவ்வளவு விரைவாகப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறோம் என்பதே முக்கியம். கவுண்டம்பாளையம் தொகுதிக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இப்பிரச்சினைகள் அனைத்தும் களையப்படும்,” என கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
