வரவிருக்கும் 2029 மக்களவை தேர்தலை ஒட்டி, தேசிய அரசியலில் ஆழம் பார்க்க தமிழக வெற்றிக் கழகம் காய் நகர்த்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக ஏராளமான இன்ஸ்டாகிராம் கணக்குகள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத ஒன்று. நீண்ட அனுபவம் பெற்றிருந்த இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி, கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது தமிழக வெற்றிக் கழகம். இதன் பின்னணியில் விஜய்யின் திரைத்துறை கவர்ச்சி பெரிய பங்களிப்பை செலுத்தியது. இருப்பினும் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு வைரலாக்கப்பட்ட விஜய், தவெக தொடர்பான கண்டெண்ட்களும் முக்கிய காரணம். இது இணையத்தில் அதிகம் உலவும் இளம் தலைமுறையினர், ஜென் ஸிக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
தவெகவின் பலம் வாய்ந்த டிஜிட்டல் களம்
இந்த விஷயத்தில் கோட்டை விட்ட திமுகவும், அதிமுகவும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், ஜென் ஸி Meet UP, கட்சி கட்டமைப்பில் இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் போன்ற வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் தவெகவின் டிஜிட்டல் களம் என்பது தமிழகம் தாண்டி தேசிய அளவில் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. இதனை பாஜக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளே எதிர்பாராத ஒன்று. குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கு ஊடக வெளிச்சம் தானாகவே தேடி தேடி கிடைத்து வருகிறது.
இரண்டு கட்சிகளையும் எதிர்க்க சரியான நபர் விஜய் தான்-
இண்டர்நெட்டில் மவுசு காட்டும் விஜய் கண்டெண்ட்
மற்ற கண்டெண்ட்களை காட்டிலும் விஜய் தொடர்பான கண்டெண்ட்களுக்கு தான் மவுசு அதிகம். மக்களும் அதிகம் விரும்பி பார்க்கும் அளவிற்கு களம் மாறிவிட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் சமூக வலைதளங்களும் கைகொடுத்து வருகின்றன. அதிலும் வட இந்தியாவில் உள்ள யூ-டியூபர்களும், நெட்டிசன்களும் விஜய்யை பிரபலப்படுத்தும் நோக்கிலும், அதன் மூலம் பொருளாதார பலனை அடையும் வகையிலும் உண்மைக்கு மாறான பல விஷயங்களை பரப்பி வருகின்றன. இதை ஒவ்வொன்றாக கண்டறிந்து தவறுகளை நீக்குவது என்பது எளிதான காரியம் அல்ல.
மாநில வாரியாக தவெகவின் இன்ஸ்டா கணக்குகள்
இத்தகைய சூழலில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய சம்பவத்தை தவெக கையில் எடுத்துள்ளது. மாநில வாரியாக சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் tvk madhyapradesh, tvk maharashtra என வட இந்திய மாநிலங்களிலும், tvk keralam, tvk karnataka என தென்னிந்திய மாநிலங்களிலும் தனித்தனி இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. இவை முதலமைச்சர் விஜய்யின் பேச்சு, அறிவிக்கும் திட்டங்கள், தினசரி செயல்பாடுகள் போன்றவற்றை தங்கள் மாநில தாய் மொழியில் மொழிபெயர்த்து பதிவிட்டு வருகின்றனர்.
வர்ச்சுவல் வாரியர்ஸ் தான் இனி கட்சி தொண்டர்கள்
இதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் விஜய்க்கான இமேஜ் கட்டமைக்கப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளின் பலம் என்பது அவர்களின் தொண்டர்கள் தான். இவர்களின் களத்தில் இறங்கி தீவிரமாக வேலை செய்ததன் காரணமாகவே, ஆட்சி கட்டிலை இதுவரை அலங்கரிக்க முடிந்தது. ஆனால் தற்போது Virtual Warriors எனப்படும் சமூக வலைதள வியூக நிபுணர்கள் தான் தொண்டர்களாக மாறியுள்ளனர். இவர்கள் நினைத்தால் புதிதாக ஒரு ஆட்சியை அமைக்கலாம். அதேபோல ஆட்சியை மாற்றவும் முடியும் என்பதை நிரூபிக்க தொடங்கியுள்ளனர்.
2029 பிரதமர் ரேஸில் விஜய்
இதன் முக்கியத்துவத்தை முன்கூட்டியே உணர்ந்து தான் விஜய் டிஜிட்டல் அரசியலில் இறங்கியிருக்கிறார். இதன் நீட்சி தமிழகம் தாண்டி வட இந்திய மாநிலங்கள் வரை செல்ல தொடங்கிவிட்டது. இது 2029 மக்களவைத் தேர்தலை ஒட்டி முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. ஒருவேளை தேசிய அளவில் தனக்கான செல்வாக்கு என்னவென்று முட்டி மோதி பார்த்துவிட விஜய் தயாராகி விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்தில் கூட இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று மக்களிடம் கேட்டதற்கு 9.2 சதவீதம் பேர் விஜய்க்கு தங்கள் ஆதரவை பதிவு செய்திருக்கின்றனர். இந்த செல்வாக்கு படிப்படியாக உயரும். ஆனால் அது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியாக மாறக்கூடும்.
