தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 வாரங்களில் மட்டும் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய 15 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகம் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் ஜூலை 3 அன்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, செயல் பொறியாளர் ஆர். சரவணன் மற்றும் சென்னை மேயர் ஆர். பிரியா பிரதிநிதித்துவப்படுத்தும் 74-வது வார்டில் பணியாற்றி வந்த உதவிப் பொறியாளர் டி. சரஸ்வதி ஆகியோர் மீது ஜூலை 6 அன்று வழக்குப் (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சரவணனின் அலுவலகத்திலிருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கம், தங்க நகைகள், வரி ரசீதுகள் மற்றும் பல தங்க சேமிப்புத் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும், ரூ. 32,000 மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த மதுபாட்டில்கள் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பரிசாகப் பெறப்பட்டதாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
இதேபோல், சரஸ்வதியின் பெயரில் 246 மாதங்களுக்கு மாதம் ரூ. 25,000 செலுத்த வேண்டிய ஒரு தங்க சேமிப்புத் திட்டத்தையும், 182 மாதங்களுக்கு மாதம் ரூ. 5,000 செலுத்த வேண்டிய மற்றொரு திட்டத்தையும் காட்டும் ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும், சரவணனின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் இருந்து சரஸ்வதியின் வீட்டுக் கடன் தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் சரவணனின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், ரூ. 10.61 லட்சம் மதிப்பிலான விளக்கப்படாத ரொக்க வைப்புகள் கண்டறியப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
சரஸ்வதியின் பெயரில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரிப்பன் பில்டிங்ஸில் உள்ள இணை ஆணையர் (பணிகள்) அலுவலகத்தில் ஓட்டேரி நல்லா கால்வாய் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டதாக சரஸ்வதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரியிடம் சரிபார்த்ததில் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியானதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். மேலும் சரஸ்வதியின் கூகுள் பே பரிவர்த்தனைப் பதிவுகளின் 14 பக்கங்களை ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் ரூ.1.71 லட்சம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெற்றதை கண்டறிந்துள்ளனர்.
இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், செயல் பொறியாளரால் உதவிப் பொறியாளரின் பெயரில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளை ஆய்வு செய்து வருவதாகவும், அத்துடன் இந்த நிதிப் பரிவர்த்தனைகளுக்குப் பின்னால் உள்ள நபர்களை அடையாளம் கண்டு வருவதாகவும் கூறியுள்ளார்கள். மேலும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளால் நிதி பரிவர்த்தனை நடைபெற்றது குறித்து விளக்க முடியவில்லை என்றும், பணியை விட்டு நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கும் முன், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
அதே அலுவலகத்தில் பணியாற்றிய உதவிச் செயல் பொறியாளர் (நகரத் திட்டமிடல்) ரவிவர்மனின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் ரூ. 2.39 லட்சம் மதிப்பிலான விளக்கப்படாத கூகுள் பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சோதனைகளுக்குப் பிறகு மேலும் நான்கு மாநகராட்சி ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திரு.வி.க நகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் மணிகண்டன், கண்காணிப்பு கணக்காளர் ஏ. ஸ்ரீராமுலு, சுகாதார அதிகாரி ஏ. மஞ்சித் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளர் ஆர். கோத்தண்டன் ஆகியோர் இதில் அடங்குவர். மாவட்ட நலத்துறை ஆணையத்தின்படி, சோதனைகளின் போது அதிகாரிகளிடமிருந்து கணக்கில் காட்டப்படாத மொத்தம் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது பணிநீக்க நடவடிக்கைகளையும், கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரனுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். ஊழல் பொறுத்துக்கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியை அனுப்புவதும், அதே நேரத்தில் நேர்மையான அரசு ஊழியர்களின் மன உறுதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய துறை சார்ந்த கவலைகளை நிவர்த்தி செய்வதும் அரசின் நோக்கம் என்றும் முதல்வர் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
