நமது நிருபர்
ஆந்திர அரசுப் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி கண்டூலா ஜெஸ்ஸி, உலகின் முதல் உலகளாவிய பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிலவு செயற்கைக்கோள் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) என்பது பெண்களின் அறிவியல் மற்றும் விண்வெளித் திறனை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய திட்டமாகும். இதைச் சென்னையை மையமாகக் கொண்ட விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா உருவாக்கியுள்ளது. 108 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 சிறுமிகள் பங்கேற்றதில் இருந்து, மிஷன் சக்திசாட் திட்டத்திற்கான திறமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்படி தேர்வான 20 பேரில் 14 வயதான ஆந்திர மாணவி கண்டூலா ஜெஸ்ஸியும் ஒருவர்.
550 பயிற்சி வகுப்புகள்
இவர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தவளேஸ்வரத்தைச் சேர்ந்தவர். ஜெஸ்ஸியின் தந்தை ஒரு தச்சர். அரசுப் பள்ளியில் படித்து வரும் இவர், தனது விடாமுயற்சியால் இந்த அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். விண்கல அமைப்பு (Satellite systems), உந்துவிசை (propulsion), வெப்ப இயக்கவியல் (thermodynamics) போன்ற மிகக் கடினமான விண்வெளி அறிவியல் பாடங்களில் 550 பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
பாராட்டு
மாணவர்களால் வடிவமைக்கப்படும் இந்த நிலவு விண்கலம் அக்டோபர் 11ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. டில்லியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்கலத்தை வடிவமைப்பது, உருவாக்குவது, செலுத்துவது, இயக்குவது என அனைத்திலும் இவரது பங்களிப்பு இருக்கும். சர்வதேச அளவிலான செயற்கைக்கோள் திட்டத்தில் ஆந்திர மாணவி தேர்வு செய்யப்பட்டது இணையத்தில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. ”தன் மகள் சர்வதேச விஞ்ஞானிகளுடன் உரையாடுவதைப் பார்த்தது, தங்கள் வாழ்வின் மிகவும் பெருமைக்குரிய தருணங்களில் ஒன்று” என மாணவி கண்டூலா ஜெஸ்ஸியின் தாய் அருணா நினைவு கூர்ந்தார்.
மாணவி நெகிழ்ச்சி
சாதனை படைத்த 10ம் வகுப்பு மாணவி கண்டூலா ஜெஸ்ஸி கூறியதாவது: சர்வதேச விஞ்ஞானிகளிடம் பேசுவதற்கு நான் பதற்றமாக இருந்தேன். என்னைப் போன்ற ஒரு அரசுப் பள்ளி மாணவி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. பள்ளியில் நாம் படிப்பதை விட அவை மிகவும் வித்தியாசமாக இருந்ததால், ஆரம்பத்தில் எனக்குக் கடினமாக இருந்தன;
ஆனாலும், நான் தினமும் வகுப்புகளுக்குத் தொடர்ந்து சென்றேன். கடின உழைப்பின் மூலம் இஸ்ரோவில் சேரும் என் கனவை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், என் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன். இவ்வாறு கண்டூலா ஜெஸ்ஸி கூறினார்.
