கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, மருத்துவத் துறையும் தரமற்றதாகிடும் சூழல் உருவாகிறது. இதை எதிர்த்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சார்பாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த ஜூலை 20 அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும், மாணவர்களும் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, கடந்த திங்கட்கிழமை அன்று, அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறையினர் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல் மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வது போன்ற பல அத்துமீறல் செயல்களிலும் காவல்துறையினர் ஈடுபட்டதாக வெளியாகும் வீடியோக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் தங்கள் மீது வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தத் தயாராக இருக்கிறார்கள் எனக் கணித்துள்ள இளைஞர்கள், காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு இளைஞர் தன்னுடைய மேல் சட்டை மற்றும் கால் சட்டைக்குள்ளே தெர்மாகோலை (நுரை அட்டைகள்) வைத்துக் கொள்கிறார். பின்பு, தலையில் தலைக்கவசம் அணிந்து கொள்கிறார். கையில் ஒரு பூங்கொத்துடன் போராட்ட களத்திற்கு தயாரானார். அதாவது, காவல்துறையினர் தாக்கும் போது தனக்கு அடிபடாமல் இருக்க தெர்மாகோலையும், தலையில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தலைக் கவசத்தையும், அதே போல, அமைதியாகப் போராட்டத்திற்குத் தான் வந்திருக்கிறோம், வன்முறை தேவையில்லை என்பதை உணர்த்தக் கையில் பூங்கொத்தையும் கொண்டுவந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
