‘விமான நிலையத்தில் நுழைந்த விசித்திர பறவை’; அலறியடித்து ஓடிய பயணிகள்

விமான நிலையத்தில் புகுந்த விசித்திர பறவை ஒன்று, அங்கிருந்த பயணிகளைத் தாக்க முயன்றதால் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.   

அமெரிக்காவின், இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள  ’சிகாகோ ஓஹேர்’ சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 5 பகுதியில், ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் செக்-இன் வரிசை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில், திறந்திருந்த ஒரு கதவு வழியாக ஒரு விசித்திரமான பச்சை நிறப் பறவை (கிளி போன்ற தோற்றம் கொண்டது) விமான நிலையத்தின் உள்ளே நுழைந்துள்ளது

விமான நிலையத்திற்குள் பல மணி நேரம் பறந்து திரிந்த அந்தப் பறவையுடன் பயணிகள் விளையாடுவது மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வது என உற்சாகமாக இருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய அந்த பறவை, திடீரென அங்கிருந்த பயணிகளின் தலை மற்றும் உடைமைகள் மீது அமர்ந்தது. பின்பு, அது அங்கிருந்த பயணிகளைக் கொத்தத் தொடங்கியது. அதைப் பிடிக்கவோ அல்லது அதனிடம் அன்பாகப் பழகவோ முயன்ற பயணிகளையும், விமான நிலைய ஊழியர்களையும் அது ஆக்ரோஷமாகக் கொத்தித் தாக்கியது. 

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள், தங்களைத் தற்காத்துக் கொள்ள அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனிடையே, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, விமான நிலையத்தின் துப்புரவுப் பணியாளர் ஒருவர், மிகவும் சாதுரியமாகத் தனது சட்டையைக் கொண்டு அந்தப் பறவையைப் பாதுகாப்பாகப் பிடித்தார். அந்த பறவை மருத்துவ பரிசோதனைக்காக உள்ளூர் கால்நடை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.