வீடு விற்று பணத்தை வங்கியில் முதலீடு செய்யலாமா?

நான் ‘ஆவின்’ நிறுவனத்தில் பணியாற்றி, 16 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன். ஆண்டுதோறும் இ.பி.எப்.ஓ., மற்றும் ஆவின் பென்சனுக்காக நவம்பர் மாதம் ஆன்லைன் வழியாக உயிர்வாழ் சான்றிதழ் கொடுத்து வருகிறேன். 2026 அக்டோபர் மாதமே இரண்டிற்கும் உயிர்வாழ் சான்றிதழ் கொடுத்து விட்டேன். எனக்கு அலைபேசியில் ‘பிரமாண் ஐடி’ நம்பர்கள் வந்தன. ஆனால் உடன் ஓய்வுபெற்ற நண்பர்கள் அக்டோபர் 2026ல் நான் கொடுத்த உயிர்வாழ் சான்றிதழ் செல்லாது எனவும்; 2026 நவம்பரில்தான் கொடுக்கவேண்டுமெனவும் கூறுகிறார்கள். 2026 அக்டோபரில் கொடுத்த உயிர்வாழ் சான்றிதழ் செல்லாதா? 2026 நவம்பரில் மறுபடியும் கொடுக்கவேண்டுமா? விபரம் தெரியப்படுத்தவும்.

க.சண்முகவேல்,

அருப்புக்கோட்டை, விருதுநகர்.

இ.பி.எப்.ஓ.விற்கு அக்டோபர் 2026ல் நீங்கள் கொடுத்த உயிர்வாழ் சான்றிதழ் முற்றிலும் செல்லுபடியாகும். ஆனால், ஆவின் ஓய்வூதியத்திற்கு நவம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை சமர்ப்பிப்பதே பாதுகாப்பானது. உங்களது இரு ஓய்வூதிய அமைப்புகளுக்கும் விதிகள் மாறுபடுவதால், உங்கள் நண்பர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்.

இ.பி.எப்.ஓ., அமைப்பின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின்படி, ஓய்வூதியதாரர்கள் ஆண்டின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் தங்களது டிஜிட்டல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். நீங்கள் சான்றிதழ் சமர்ப்பித்த தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு (அதாவது அக்டோபர் 2027 வரை) அது தடையின்றி செல்லுபடியாகும்.

ஆனால், ஆவின் நிர்வாகம் ஆண்டுதோறும் வெளியிடும் சுற்றறிக்கைகளின்படி, ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, நவம்பர் 1 – 30க்குள் மட்டுமே ‘ஜீவன் பிரமாண்’ தளம் வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறது.

அதனால், அக்டோபர் மாதத்தில் நீங்கள் ஆன்லைனில் சமர்ப்பித்தபோது, பொதுவான ஜீவன் பிரமாண் தளம் அதை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ‘பிரமான் ஐடி’ குறுஞ்செய்தி அனுப்பியிருக்கும். ஆனால், ஆவின் நிர்வாகம் தங்களது சரிபார்ப்பை நவம்பர் மாத சுழற்சியில் மட்டுமே மேற்கொள்வதால், அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் செய்த பதிவை ஆவின் கணக்குப் பிரிவு ஏற்காமல் விடுபட வாய்ப்புள்ளது.

நவம்பரில் சான்றிதழ் புதுப்பிக்கப்படவில்லை என்றால், டிசம்பர் முதல் ஆவின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. ஓய்வுபெற்ற உங்கள் நண்பர்கள் சொல்வது, ஆவின் ஓய்வூதியத்தை பொறுத்தவரை முற்றிலும் சரியானது. எனவே, தடங்கல் இன்றி ஆவின் பென்ஷன் தொடர, வருகிற நவம்பர் மாதத்தில் ஆவின் ஓய்வூதியத்திற்காக மட்டும் மீண்டும் ஒருமுறை ஆன்லைன் வாயிலாகவோ, இ–சேவை மையம் வழியாகவோ சான்றிதழை சமர்ப்பித்து விடுங்கள்.

மும்பையில் வசிக்கும் எனக்கு, கோவையில் ஒரு பிளாட் இருக்கிறது. 2012ல் வாங்கிய அந்த வீட்டில் இருந்து வாடகை வருகிறது. அந்த பிளாட்டை விற்பனை செய்யலாம் என்று யோசிக்கிறேன். அந்த தொகையை வங்கியில் முதலீடு செய்வது சரியா? அல்லது மும்பையில் இன்னொரு பிளாட் வாங்குவது சரியா?

லீலா கே.மூர்த்தி, மும்பை

பொதுவாக பழைய வீட்டின் விற்பனையில் இருந்து கிடைக்கும் லாபத்துக்கு, நீண்டகால மூலதன ஆதாய வரியை கட்டாமல் தவிர்ப்பதற்காக, இன்னொரு அடுக்ககமோ, புது வீடோ வாங்குவது தான் பொருத்தம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழல் சம்பந்தப்பட்டது. உங்களுக்கு ஏற்கனவே மும்பையில் வீடு இருந்து, இன்னொரு வீட்டையும் வாங்கி போட்டால், வாடகை வருமானம் கிடைக்கலாம். மும்பையில் வீடுகளின் விலை மிக அதிகம், ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வாடகை வருவாய் ஆண்டுக்கு வெறும் 2 – 3 சதவீதம் மட்டுமே.

எதிர்காலத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்… நாளை உங்கள் மகளோ, மகனோ இந்தியாவிற்கு வராமல் வெளிநாட்டிலேயே ‘செட்டில்’ ஆக போகிறவர்களாக இருந்தால், இந்த சொத்துக்களால் அவர்களுக்கு லாபத்தை விட தொல்லையே அதிகம். அவர்களால், நினைத்த நேரத்தில் வீட்டை விற்பனை செய்ய முடியாது. யாரும் கண்ணை மூடிக்கொண்டு, பெரும் பணத்தை கொட்டி, ‘ரீசேல்’ வீட்டை வாங்குவதில்லை; ‘அடிமாட்டு’ விலைக்கு தான் கேட்பர்.

நீங்கள் புதிய வீட்டில் அடுத்த 20, 25 ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டு, அனுபவிக்க போகிறீர்கள் என்றால், வாங்குங்கள். இல்லையெனில், நீண்ட கால மூலதன ஆதாய வரியை செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை நல்ல வங்கியில் முதலீடு செய்துவிட்டு, ‘ஹாயாக’ இருங்கள். உங்கள் சந்ததிகளுக்கு வங்கியில் பணமாக வைத்துவிட்டு போனால், அவர்களும் மகிழ்வர்.

என் வயது 61. எனக்கு இன்ஷூரன்ஸ் தொகை முதிர்வடைந்து, ஜனவரியில் கிடைக்கும். அதை அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்பு, வங்கி வைப்பு நிதி அல்லது, எஸ்.டபுள்யு.பி, எதில் முதலீடு செய்யலாம்? நான் ஹோம் டியூஷன் எடுத்து கொண்டிருக்கிறேன். பென்ஷன் கிடையாது. நல்ல அறிவுரை சொல்லுங்கள்.

பி.அங்கமுத்து,

மணியகரம்பாளையம், கணபதி, கோயம்புத்துார்.

எவ்வளவு தொகை வரப் போகிறது என்று தாங்கள் குறிப்பிடவில்லை. உங்களுடைய டியூஷன் வருமானம் மாதாமாதம் மாறுபடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு ஒரு நிதிப்பாதுகாப்பு வேண்டும். அதனால், வரக்கூடிய இன்ஷூரன்ஸ் தொகையில், 70 சதவீதம் பணத்தை, அஞ்சலகத்தில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். இன்றைக்கு இந்தியாவில் அதிகபட்ச பாதுகாப்புடன் இருப்பது இந்த முதலீடு தான். மேலும், வங்கிகளை விட அதிக வட்டி. 8.20 சதவீதம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணம் உங்கள் வங்கி கணக்குக்கே வந்துவிடும்.

உடல் நலிவு, திருமணம், விசேஷங்கள் என்று சில செலவுகள் எப்போதும் இருக்கும். அதற்காக ஓர் அவசர கால நிதி முதலீடாக மீத தொகையில் 20 சதவீதத்தை வங்கி வைப்பு நிதியில் போட்டு வையுங்கள். எப்போது வேண்டுமானாலும், அதை எடுத்துக்கொள்ளலாம்.

மீதமுள்ள 10 சதவீத தொகையை மியூச்சுவல் பண்டுகளில் முறையாக திரும்பப் பெறும் எஸ்.டபிள்யு.பி., திட்டத்தில் போட்டு வையுங்கள். நீண்ட கால பணவீக்கத்தை சமாளிக்க இந்த முதலீடு உதவும்.

Source link