சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் ஈஸ்வரன் என்பவர் மனைவி வசந்த மல்லிகாவுடன் (வயது 56) வசித்து வந்துள்ளார். ஈஸ்வரன் தனியார் கண்ணாடிக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், இன்று (29.10.2026) மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது மனைவி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததுடன், அவரது 7 சவரன் நகைகளையும் தோடுகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளிகளைக் கண்டறிய மோப்ப நாய் லைலா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சென்ற வழியைப் பின்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, எப்படி கொலையாளிகள் வீட்டிற்குள் புகுந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
