வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காலில் சுட்டுப்பிடித்த போலீசார் மற்றொரு சம்பவத்தில் எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை புறநகர் பகுதியான திருமுடிவாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொரு சம்பவத்தில், மீஞ்சூரில் பதுங்கியிருந்த ரவுடிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது, எஸ்.ஐ.,யை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர்.

சென்னை குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழழகு, 27; ரவுடி. இவர் மீது குன்றத்துார், திருமுடிவாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரகசிய தகவல்

இவர் தன் கூட்டாளி சூர்யா, 24, என்பவருடன் சேர்ந்து, குன்றத்துார் அடுத்த காவனுாரில், காலி இடத்தில் நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதாக, திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, அந்த இடத்திற்கு சென்று, தமிழழகு மற்றும் சூர்யாவை சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற தமிழழகு, தான் வைத்திருந்த கத்தியால், தலைமை காவலர் விஜயகுமார் என்பவரை வெட்டினார். இதில், விஜயகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

உடன், சுதாரித்த எஸ்.ஐ., மணிகண்டன், துப்பாக்கியால் தமிழழகுவின் வலது காலில் சுட்டார். சுருண்டு விழுந்தவரை போலீசார் கைது செய்தனர்; தப்பி ஓட முயன்ற சூர்யாவையும் மடக்கி பிடித்தனர்.

காயமடைந்த தமிழழகு, ஏட்டு விஜயகுமார் ஆகியோர், சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, திருமுடிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 34; ரவுடி. இவர் மீது போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை, சென்னை போலீசின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், பூபாலன் தன் கூட்டாளிகளுடன், சென்னை புறநகர் பகுதியான மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பாலாஜி நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ., வெங்கடேசன், போலீஸ்காரர் மதன்குமார் ஆகியோர், பூபாலனை பிடிக்க அந்த இடத்திற்கு சென்றனர். மதன்குமார் வீட்டிற்கு வெளியே காத்திருந்தார்.

தலையில் வெட்டினார்

எஸ்.ஐ., வெங்கடேசன் வீட்டிற்குள் புகுந்து பூபாலனை பிடித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த பூபாலனின் கூட்டாளிகளில் ஒருவர், எஸ்.ஐ.,யின் பின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

இதனால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடன், எஸ்.ஐ., பிடியில் இருந்து பூபாலனும், அவரின் கூட்டாளிகளும்தப்பியோடினர்.

காயம் அடைந்த வெங்கடேசன், மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டன. சிகிச்சைக்கு பின், அவர் வீடு திரும்பினார்.

தகவல் அறிந்த செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரி, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பாக, பூபாலன் உள்ளிட்ட ஆறு பேர் மீது, மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுகின்றனர்.

Source link