பிரிட்டனைச் சேர்ந்த ஜாக் ஹீட்டன் என்பவர் சமீபத்தில் இந்தியாவில் தான் பயணம் செய்த ஏசி ஸ்லீப்பர் பஸ் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்தில் அவர் மேற்கொண்ட இந்தப் பயணம், தனது இந்தியப் பயணத்திலேயே மிகச் சிறந்த ஒன்று என அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
எகிப்து தங்க உலகத்தை பார்க்க படை எடுக்கும் மக்கள்… 48 மணி நேரம் தான் கெடு; இந்தியர்களை ஒதுக்கி வைத்த நாடு
ஆச்சரியத்தில் உறைந்த ஃபாரினர்
இந்தியாவில் 3 மாதங்களுக்கும் மேலாகப் பயணம் செய்து வரும் ஜாக், பலவிதமான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இந்த ஏசி ஸ்லீப்பர் பேருந்து அவருடைய எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக உடைத்துள்ளது. பேருந்தில் ஏறிய உடனே அதன் நவீனமான உள் கட்டமைப்பு, விசாலமான படுக்கை வசதி மற்றும் தூய்மை ஆகியவை அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளன. வீடியோவில் பேசிய அவர், “நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனேன். இந்தியாவின் ஸ்லீப்பர் பஸ்கள் ஐரோப்பாவையே மிஞ்சிவிடும் அளவுக்குச் சிறப்பாக உள்ளன” என்று வியந்து பாராட்டியுள்ளார்.
வெறும் ரூ.386-க்கு இவ்வளவு வசதிகளா?
டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்தப் பயணத்திற்கு, அவர் செலுத்திய கட்டணம் வெறும் ரூ.386 மட்டும் தான். இந்தக் குறைந்த கட்டணத்தில் அவருக்குக் கிடைத்த வசதிகளைப் பார்த்து அவர் வியந்துள்ளார். கால்களை நன்கு நீட்டிப் படுக்கும் அளவிற்குக் குளுமையான ஏசி ஸ்லீப்பர் சீட், மொபைல் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் பேருந்தின் உள்ளேயே சுத்தமான கழிப்பறை.
தால், சாதம், சப்பாத்தி, காய்கறிகள் மற்றும் குலாப் ஜாமுன் எனப் பேருந்தில் வழங்கப்பட்ட உணவு, தான் பல உணவகங்களில் சாப்பிட்டதை விட மிகவும் சுவையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். பொதுவாகப் பேருந்துப் பயணம் என்றாலே எரிச்சலடையும் தனக்கு, இந்தப் பயணம் மிகவும் ரிலாக்ஸாக இருந்ததாகவும், பயணம் முழுவதும் தன்னால் நிம்மதியாகத் தூங்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கமெண்ட்
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஒரு நெட்டிசன், “பஸ் எவ்வளவு பெருசா இருக்கு. இந்த விலையை நம்பவே முடியல” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், “வெறும் 4 டாலருக்கு 7 மணி நேரப் பயணம், அதிலும் இவ்வளவு வசதிகள் கிடைப்பது உண்மையிலேயே மிகப்பெரிய லாபம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
