சென்னை: ‘அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கின் கோப்புகளை நிலுவையில் வைத்திருந்தது ஏன்’ என, விளக்கம் அளிக்கும்படி, ஓய்வுபெற்ற பொதுத்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகள் மேற்கொள்ள உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு ‘டெண்டர்’ வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
பின், வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆஜராகி, ”வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சில விளக்கங்களை கேட்டதை அடுத்து, இது சம்பந்தமாக பிப்ரவரி 27ம் தேதி விளக்கம் அளித்து, பொதுத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது,” என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த விவகாரம், பொதுத்துறை செயலரிடம் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து, பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை. கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலர், இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன்’ என, அப்போது பொதுத்துறை செயலராக பதவி வகித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து, தற்போதுள்ள பொதுத்துறை செயலரும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முன்னதாக, ”இந்த விவகாரத்தில் சட்டசபை தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது. முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது,” என, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில், ‘உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், கோப்புகள் முடங்கியுள்ளன. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
***
