வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கும் பணி நியமன வாய்ப்பு விதிகளை வரையறுக்க டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: ‘திருநங்கையர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் போது, இணையவழி விண்ணப்ப பதிவு தளத்தில் அனுமதிப்பது மட்டும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வாகாது. பணியிட அறிவிப்புகளே பாலின அடிப்படையில் இருக்கும் போது, திருநங்கையர் எவ்வாறு பணி நியமனத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதை தெளிவு படுத்தும் வகையில், டில்லி அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லி அரசின் ஆசிரியர் பணியிட வேலைவாய்ப்பு இணைவழி பதிவு தளத்தில், பதிவு செய்பவர், ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் இருந்தது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பது குறித்து, டில்லி உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஜேன் கவுசிங் என்ற திருநங்கை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி, டில்லி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, திருநங்கையர் என்பதையும் சேர்க்க வேண்டும் என்று, அந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டது. மேலும், ‘2019 ம் ஆண்டில் அமலுக்கு வந்த திருநங்கையர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும. திஙருநங்கையருக்கு தனி காலிப்பணியிடங்கள் ஏறு்படுத்தி, இதற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு கொள்கையும் வகுக்க வேண்டும்’ என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு மனுக்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருந்ததை சுட்டிக்காட்டிய, டில்லி உயர்நீதிமன்றம், ஜேன் கவுசிக்கை திருநங்கை பதிவுதாரராக விண்ணப்பிக்க, அனுமதி அளித்தது.

டில்லி அரசின் ஆசிரியர் பணியிடங்களில், திருநங்கையருக்கும் இடஒதுக்கீடு கோரி ஜேன் கவுசிக்கின் தாக்கல் செய்த மனுவையும், உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. டில்லி அரசு பணிகளில், திருநங்கையருக்கு தனி பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், விரிவான பணி நியமனக் கொள்கை வகுக்க வேண்டும் என்றும் கோரி, ஜேன் கவுசிக் என்ற திருநங்கை, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆடங்கிய அமர்வு முன், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டில்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதத்தில் கூறியதாவது: இணையவழி விண்ணப்ப தளத்தில், ‘ஆண்’ மற்றும் ‘பெண்’ ஆகிய பாலின பிரிவுகள் மட்டுமே இருந்ததாக புகார் இருந்தது. திருநங்கையாக உள்ள மனுதாரர் இப்பிரச்னையால், தன்னால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று புகார் எழுப்பினார். அதனால், விண்ணப்பிக்கும் போது, ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனுதாரரின் பிரச்னைக்கு ஏற்கனவே தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருநங்கையர் அனைத்து இடங்களிலும் கண்ணியத்துடன் வேலை வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய நாங்கள் முழு முயற்சி எடுத்து வருகிறோம். இது தொடர்பான, பரந்த அளவிலான பிரச்னைகளை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

தற்போது எழுந்துள்ள இப்பிரச்னை, இணையதள வழியில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பையும் தாண்டி, விரிவானது. இணையதள வழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விளம்பரங்களில், ‘பெண்’ அல்லது, ‘ஆண்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இதனால், திருநங்கயைருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஜேன் கவுசிக்கின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சூழலுக்கு ஏற்ப ஆண் அல்லது பெண் விண்ணப்பதாரர் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறார்; ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தில் திருநங்கைகளுக்குத் தனிப் பிரிவு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அவரது வாதம்.

திருநங்கையரும் மனிதர்கள் தான். அவர்களை சற்று கருணையுடன் பாருங்கள். இப்பிரச்னையில், விண்ணப்பிக்கும் போது வாய்ப்பளிப்பதை கடந்து, பணி நியமணத்தின் போது தான் உண்மையான சிக்கல் எழுகிறது.

திருநங்கையர் விண்ணப்பித்தாலும், எந்தப் பிரிவின் கீழ் அவர் பரிசீலிக்கப்படுவார் என்ற கேள்வி எழுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாலும், பணி நியமனத்தின் போது, ‘வகைப்பாட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை’ என்று, கூறி பணி வாய்ப்பை மறுக்கக்கூடும். இது குறித்துப் புதிய அறிவுறுத்தல்களை டில்லி அரசு வரையறுக்க வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களுக்கான இணையதள வழியில், ஜேன் கவுசிக் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களை மட்டுமே அங்கீகரிப்பதால், அவர் பணி நியமனத்திலிருந்து விலக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பணியிட அறிவிப்புகளே பாலின அடிப்படையில் இருக்கும்போது, திருநங்கையர் எவ்வாறு பணி நியமனத்திற்குப் பரிசீலிக்கப்படுவர் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், டில்லி அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Source link