சிதம்பரம் அருகே சி.முட்லூரில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை பயின்ற 1,048 மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘மாணவர்கள் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் மறக்கக் கூடாது. ஏஐ தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புகள் நிறைந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். கல்லூரிகள் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்கி கல்லூரி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
முன்னதாக, சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கே.ஐ. மணிரத்தினம் தலைமையில் அமைச்சரை வரவேற்று வெடி வெடித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அமைச்சர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், காங்கிரஸ் நிர்வாகிகள் துரை பாலச்சந்தர், சௌந்தரபாண்டியன், டாக்டர் கமலக்கண்ணன், அரவிந்த் மணிரத்தினம், மணிமொழி, சங்கர், ஜெயசீலன், அண்ணாதுரை, அமிர்தலிங்கம், தமிழரசன், ரவி, கஜேந்திரன், ஜானு ஜாகீர் உசேன், செல்வம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கிருபா உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
