சாலையில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளரை வேளச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மணிமாறன், தனது உறவினருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுள்ளனர்.
நடுரோட்டில் நடந்த அக்கிரமம்
வேளச்சேரியில் உள்ள ஒரு தெருவில், பெண் ஒருவர் தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையின் உச்சத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மணிமாறன், திடீரென அந்தப் பெண்ணை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், கணவர் உடனிருக்கும்போதே போதை ஆசாமி அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த வேளச்சேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
விசாரணையில், பெண்ணிடம் அத்துமீறியது ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பது உறுதியானது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பான இடத்தில் இருக்கும் ஒரு காவல் அதிகாரியே, மதுபோதையில் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை வேளச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
